மூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்

சிவகங்கை மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் இதுவரை வழங்கப்படாததால் மாணவர், ஆசிரியர் குழப்பமடைந்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். 2018 -19ம் கல்வியாண்டிற்கான முதல் இரண்டு பருவத்தேர்வுகள் முடிவடைந்துள்ளது. ஜன.2ல் இரண்டாம்பருவத்தேற்விற்கான விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன.தற்போது மூன்றாம் பருவத்திற்கான பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்றாம் பருவத்திற்கான புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்ட நிலையில் நோட்டுகள் வழங்கப்படவில்லை. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் நோட்டுகள் வழங்கப்படாததால் பாடம் நடத்துவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பள்ளிகள் திறக்கப்பட்டு இரண்டு வாரத்திற்கு மேல் ஆன நிலையில் இது வரை நோட்டுகள் வழங்குவது குறித்து எந்த தகவலும் இல்லை. கல்வி அலுவலகங்களில் நோட்டுகள் கேட்டு தலைமையாசிரியர், ஆசிரியர் சென்ற நிலையில் நோட்டுகள் வழங்கப்படுவது குறித்து தங்களுக்கே தகவல் வரவில்லை என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: நோட்டுகள் இல்லாமல் பாடம் நடத்த முடியவில்லை. அனைத்து மாணவர்களையும் கடைகளில் நோட்டுகள் வாங்கி வரச்சொல்வதிலும் பிரச்னை உள்ளது. வழக்கமாக ஏதாவது ஒரு வகுப்பு மாணவர்களுக்கு நோட்டு இல்லாத நிலை ஏற்படும்.

ஆனால் தற்போது ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் நோட்டு வழங்கப்படவில்லை. இது குறித்து கல்வி அலுவலகங்களில் முறையான பதில் கூற மறுக்கின்றனர். உடனடியாக நோட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மாணவர்கள் தான் வாங்க வேண்டுமெனில் அந்த தகவலையாவது தெரிவிக்க வேண்டும் என்றனர்.