இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது; அமைச்சர் செங்கோட்டையன்


வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார்.

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பள்ளி கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக பெருமையுடன் தெரிவித்தார். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் அரசு பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளி கல்வித்துறையில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றிய கேள்விக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார். யார் தவறு செய்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதியுடன் தெரிவித்தார். ஆசிரியர் பயிற்சி தகுதி தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும், புதிய பாடத்திட்டத்தில் என்னென்ன பாடங்கள் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை ஆலோசனைகளை வழங்கலாம் என்று அமைச்சர் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு குழு அனுப்பி கல்வி முறை பற்றி அறியப்பட்டு வருவதாகவும் கற்றல் மட்டுமின்றி, செயல்முறை பாடங்களை அதிகளவில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கேட்டையன் தெரிவித்தார்.