கணினி ஆசிரியர்களின் கனவு நிறைவேறுமா? இன்று உலக கணினி எழுத்தறிவு தினம்


டிசம்பர் 2-ஆம் தேதி உலக கணினி எழுத்தறிவு தினம் கடைப்பிடிக்கப்படும் நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் கணினி ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.
 கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன் பி.எட். படித்து முடித்த கணினி ஆசிரியர்கள் எந்தவொரு பயனும் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2011-ஆம் ஆண்டு சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்பு வரை கணினி அறிவியல் தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இதை நம்பி சுமார் 60 ஆயிரம் பேர் கணினி துறையில் பி.எட். படித்தனர். ஆனால், ஆட்சி மாற்றத்தினால் அந்தத் திட்டம் கொண்டுவரப்பட்ட வேகத்திலேயே கைவிடப்பட்டது. இதற்காக ரூ. 300 கோடி செலவில் கணினி அறிவியல் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டன. அவை பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் முழுமையாகச் சென்றடையவில்லை. மேலும், பெரும்பாலான கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் கிடங்கிலேயே முடங்கிப் போயுள்ளன.
 தமிழக அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியலின் மேம்பாட்டுக்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் ரூ. 900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், அந்தப் பணமும் கணினி கல்விக்கு முழுமையாகச் செலவிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சுமார் 90 லட்சம் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகளின் கணினிக் கல்வியும், சுமார் 60 ஆயிரம் பி.எட்., கணினி அறிவியல் படித்த வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மட்டுமின்றி இவர்களைச் சார்ந்த குடும்பங்களும் தவித்து வருகின்றன.
 அரசுப் பள்ளிகளில் எந்தவொரு பணி வாய்ப்பும் இல்லையென்றால், தனியார் பள்ளிகளில் கூட அவர்களுக்கு நியாயமான பணி வாய்ப்புகள் இல்லை. இதனால், தனியார் பள்ளிகளில் பணிபுரிய கணினி ஆசிரியர்களுக்கென உரிய பணி விதி மற்றும் பணி வரன்முறையை உருவாக்கித் தருமாறு தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சரிடம் பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
 அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் விரைவில் வந்துவிடும், விரைவில் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுடன் காத்திருந்து, காத்திருந்து அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே எனத் தெரிவிக்கிறார் தமிழ்நாடு கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க மாநிலச் செயலாளர் தே. அகிலன்.
 இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தின் அண்டை மாநிலங்களின் அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் முக்கியப் பாடமாக உள்ளது. தமிழகத்துக்குப் பிறகுதான் கேரளத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டுவரப்பட்டது. 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் கணினி அறிவியலுக்கும் மற்ற பாடங்களைப்போல் கட்டாயத் தேர்ச்சி முறை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 தமிழகத்தில் கணினி அறிவியலில் பி.எட்., படித்து முடித்த பட்டதாரிகள் மற்றும் முதுகலைப் பட்டதாரிகள் அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கின்றனர். தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு 2011-இல் இருந்து மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் 2011 முதல் 2017 வரை 600 கணினி ஆசிரியர்கள் மட்டுமே அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளன. அதன் பின் கணினி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவில்லை.
 மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வரும் மடிக்கணினிகளும், இனி இலவசமாக வழங்கப்பட இருக்கும் "டிஜிட்டல் டேப்லெட்டுகளும்' கணினி ஆசிரியர்களின்றி எவ்வாறு முழுப் பயனை அளிக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
 பி.எட்., கணினி பட்டதாரிகளுக்காகவும், பள்ளி கல்வித் துறையில் கணினி அறிவியல் துறையின் முன்னேற்றத்துக்காகவும், வளர்ச்சிக்காகவும் கணினி ஆசிரியர்கள் கடந்த 8 ஆண்டுகளாக தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கணினி ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசு கணினி ஆசிரியர்களுக்கென எந்தவொரு திட்டத்தையும் இதுவரை செயல்படுத்தவில்லை என்றார் அவர்.
 டிசம்பர் 2-ஆம் தேதி உலக கணினி எழுத்தறிவு தினம் அனுசரிக்கப்படக் கூடிய நிலையில் தமிழக முதல்வரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும் இப்பிரச்னையில் தலையிட்டு கணினி அறிவியல் பி.எட் படித்தவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கணினி ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.