காங்கயம் அருகே அரசு துவக்கப் பள்ளியில் போதிய கட்டட வசதி செய்து தரக்கோரி, மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கயம் தாலுகா, வடசின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காரப்பாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 1993 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளியில் தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தால் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.
2013 ஆம் ஆண்டு இப்பள்ளியில் மொத்தம் 5 மாணவர்கள் மட்டுமே படித்தனர். இதனால் வேதனையடைந்த அந்த கிராமத்தை சேர்ந்த கல்வி ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து கிராம கல்விக்குழு உருவாக்கி எடுத்த முயற்சிகளின் விளைவாக பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தது. தமிழ்வழிக் கல்வி பள்ளியாக இருந்த இந்தப் பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முயற்சியால் 2013 -2014 கல்வியாண்டு முதல் ஆங்கில வழிக் கல்விப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 105 ஆக உயர்ந்துள்ளது.
இந்தப் பள்ளி குறித்து இப்பகுதி மக்கள் கூறியபோது,
தற்போது மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், இப்பள்ளிக்கு போதுமான கட்டட வசதியும் , ஆசிரியர்களும் இல்லை. கூடுதல் வகுப்பறை கட்டடம் கேட்டு பலமுறை கல்வி அதிகாரிகளை சந்தித்தோம். ஆனால் இன்று வரை தீர்வு ஏற்படவில்லை. மாணவர்களின் நலன் கருதி உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, கூடுதல் வகுப்பறை கட்ட வேண்டும், போதிய ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை வைத்து மாணவர்களை புதன்கிழமை பள்ளிக்கு அனுப்பாமல் வகுப்புகளை புறக்கணிக்கச் செய்துள்ளோம் என்றனர்.
தகவலறிந்த காங்கயம் வட்டாட்சியர் மகேஸ்வரன், குண்டடம் உதவி தொடக்க கல்வி அலுவலர் நடராஜன் ஆகியோர் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து பள்ளியின் அருகே உள்ள காலியிடத்தை அளவீடு செய்து, கூடுதல் வகுப்பறைகளுக்கான புதிய கட்டடம் 2 மாதங்களில் கட்டித்தரப்படும் எனவும், மேலும், ஒருவார காலத்தில் போதுமான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து மாணவர்களின் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.
Post a Comment