திண்டுக்கல் :
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மாவட்ட அளவிலான விருதுக்கு 4 அரசுப் பள்ளிகள் புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டன.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில், தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் மாவட்ட, மாநில, தேசிய அளவில் தூய்மை பள்ளி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2017-18ஆம் கல்வி ஆண்டுக்கான தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்ட அளவிலான சிறந்த பள்ளிகளை தேர்வு செய்வதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மாவட்டத்திலுள்ள 4 கல்வி மாவட்டங்கள் சார்பில் தலா 4 பள்ளிகள் வீதம் மொத்தம் 16 பள்ளிகள் மாவட்ட அளவிலான விருதுக்கு விண்ணப்பித்திருந்தன.
இந்நிலையில், மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்க நிலை என 4 நிலைகளில் தலா ஒரு பள்ளி வீதம் 4 பள்ளிகளை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் புதன்கிழமை தேர்வு செய்தார். தேர்வு செய்யப்பட்ட பள்ளிகள் விவரம்: திண்டுக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பொருளூர் அரசு உயர்நிலைப் பள்ளி, அடைக்கலமாதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி.
இதில் விருது பெறும் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1 லட்சமும், உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.75ஆயிரமும், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.50ஆயிரமும், தொடக்கப் பள்ளிக்கு ரூ.25ஆயிரமும் பரிசுத் தொகை வழங்கப்படும்.
இத்தொகையை பள்ளியின் அடிப்படைத் தேவை மற்றும் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெற்றோர்- ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவின் ஒப்புதலுடன் செலவிட வேண்டும் என கல்வித்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
Post a Comment