புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், ஊதியக்குழு பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீண்டும் போராட்ட களத்தில் குதித்துள்ள நிலையில் நவம்பர் 27 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்த இருப்பதாக அழைப்பு விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளுக்காக கடந்த 21 மாதங்களாக ஜாக்டோ - ஜியோ என்ற கூட்டமைப்பாக போராடி வருகின்றனர்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும். முடக்கப்பட்டுள்ள 21 மாத ஊதிய நிலுவை தொகையை உடனே வழங்கிட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள ஊதிய குறைப்பினை சரி செய்வதுடன் அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம் ரத்து செய்யப்பட்டு அனைவருக்கும் காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் காலம் காலமாக இருந்து வருகின்ற பணியிடங்களை ஒழித்தல், நியமனங்களுக்கு தடை, 5 ஆயிரம் பள்ளிகளை மூடி பொது கல்வியை பாழடிப்பது போன்ற கொள்கைகளை அரசு கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் மேற்கொண்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் நீதிமன்றம் வேலை நிறுத்தத்திற்கு அப்போது தடை விதித்தது.
நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை செப்டம்பர் 11 முதல் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களால் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று செப்டம்பர் 15ல் நீதிமன்றம் மற்றொரு உத்தரவிட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
பின்னர் இந்த வழக்கு விசாரணை முடிவில் தமிழக அரசு கடந்த அக்ேடாபர் 13ம் தேதிக்குள் ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் அல்லது இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தவறினால் நீதிமன்றமே ஊதியக்குழுவை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளும் என்று உத்தரவு வழங்கியது.
மேலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான தமிழக அரசின் தலைமை செயலாளர், பென்ஷன் திட்ட குழுவின் அறிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செயப்பட்டு அந்த அறிக்கையின் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் வாக்குறுதியை நீதிமன்றத்தில் அளித்தார். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை பெறப்பட்டு தமிழக அரசு முடிவெடுக்கும் என்று அறிவித்த வாக்குறுதிக்கு மாறாக அக்குழுவிற்கு கால நீட்டிப்பை தமிழக அரசு வழங்கியுள்ளது அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கால நீட்டிப்பு காலம் 8 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் அக்குழுவின் நிலை என்ன என்பது இப்போது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் நீதிமன்றத்தில் தமிழக அரசு அளித்த வாக்குறுதியின் நிலை என்ன என்பதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனாலேயே தொடர்ந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக கூறி மீண்டும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கடந்த 4ம் தேதி நடைபெற்ற தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் தமிழக அரசின் போராட்டத்திற்கு எதிரான உத்தரவுகள், கெடுபிடிகளை மீறி பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் விடுப்பு எடுத்து சென்றுவிட்டதுடன் போராட்டங்களிலும் பங்கேற்றனர். இதனால் பல பள்ளிகளிலும் கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட்டன. அரசு துறை அலுவலகங்களும் மூடப்பட்டதால் பணிகள் முற்றிலும் ஸ்தம்பித்தன.
இந்தநிலையில் மீண்டும் வரும் 13ம் தேதி சேலத்தில் காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படுவதுடன் நவம்பர் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளதால் அரசு மட்டத்திலும், கல்வித்துறையிலும் பணிகள் மீண்டும் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Post a Comment