KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

"பட்டாம்பூச்சி " முன்னாள் மாணவர்கள் குழு மூலம் ஹைடெக் பள்ளி ஆக மாறும் அரசு பள்ளி

தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 'ஹை டெக்' தொழில்நுட்பம், வண்ணமயமான சுவர்களில் விழிப்புணர்வு ஓவியங்கள் என மாணவர்களின் கல்வி ஆர்வத்தை துாண்டும் சகல வசதிகளும் ஏற்படுத்த முன்னாள் மாணவர்களுடன் ஆசிரியர்கள் குழு கரம் கோர்த்துள்ளது. சுகாதாரமான கழிப்பறை, மாணவர்களின் பாதுகாப்பிற்கு சி.சி.டிவி., கேமரா கண்காணிப்பு, ஆசிரியர் குழுவிற்கு வாக்கி டாக்கி என்று முன்னோடி பள்ளியாகிறது.
கடந்த 1930ல் 'விவேகானந்தா போர்டு ஹைஸ்கூல்' என்று துவக்கப்பட்டு, தற்போது அரசு மேல்நிலைப்பள்ளியாக செயல்படும் இப்பள்ளியில், ஆயிரத்து 100 மாணவர்கள் பயில்கின்றனர். 
இவர்களில் பெரும்பாலானோர் அருகேயுள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள். பின்தங்கிய மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியை அனைத்து வசதிகளுடன் கூடிய 'ஹை-டெக்' பள்ளியாக மாற்றுவதற்கான நடைமுறைகளில் தலைமையாசிரியர் குவேந்திரனுடன் இணைந்து ஆசிரியர்கள் ராஜ்குமார், ரகுபதி, ராஜிவ், கதிரேசன் செயல்படுகின்றனர்.
'பள்ளிகளை காப்போம்' 
இதற்காக 'அரசு பள்ளிகளை காப்போம்' என்ற முனைப்புடன் செயல்படும் பட்டாம்பூச்சி அறக்கட்டளையினருடன் இணைந்து, முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் பள்ளியை வண்ண மயமாக்கி வருகின்றனர். சிலமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் 6 வாக்கி டாக்கிகள் வாங்கி கொடுத்துள்ளார்.
சென்னையில் வேலை பார்க்கும் முன்னாள் மாணவர் சக்தி மணிகண்டன் சி.சி.டிவி., கேமரா பொருத்த ஆன செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். பள்ளி வளாகம் முழுவதும் கண்காணிப்பது எளிமையாக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் இடும் உத்தரவுகள் வாக்கி டாக்கி மூலம் தடையின்றி ஆசிரியர்களை சென்றடைகிறது. 
இதனால் மாணவர்களின் பாதுகாப்பு அதிகரித்துள்ளது. ஏ.எஸ்.வி., காய்கறி கமிஷன் மண்டி உரிமையாளர் வெங்கடேஷன் சமதளமின்றியிருந்த பள்ளி வளாகத்தை சீரமைக்க தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கியுள்ளார். பி.எஸ்.வி., காய்கறி கமிஷன் மண்டி உரிமையாளர் வெள்ளைச்சாமி இங்குள்ள 5 ஆயிரம் புத்தகங்களை பாதுகாத்து வைக்க தேவையான 'ரேக்கு' களை கொடுத்துள்ளார்.
ஒத்துழைப்பு
தலைமையாசிரியர் குவேந்திரன்: மாணவர்களின் கற்கும் திறன் மேம்படவும், குணநலன்கள் சிறப்பாக அமையவும் உகந்த சூழலை ஏற்படுத்த வேண்டும். பாரம்பரியமான இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் அரசு, தனியார் பணிகளில் உயர் பொறுப்புகளிலும், தொழிலதிபர்களாகவும் உள்ளனர். இவர்களுடன் இணைந்து பள்ளியை துாய்மைப்படுத்தி, கற்கும் சூழலை உருவாக்கும் முயற்சியில் ஆசிரியர்கள் கை கோர்த்துள்ளோம். எதிர்பார்த்ததை விட கூடுதலான ஒத்துழைப்பு கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது, என்றார்.
வகுப்பு தத்தடுப்பு
ஆசிரியர் ரகுபதி: அரசு பள்ளியை காப்போம் என்ற நோக்கத்தில் அரசுபள்ளி ஆசிரியர்கள் இணைந்து பட்டாம்பூச்சி அறக்கட்டளை துவக்கியுள்ளனர். பள்ளி விடுமுறை நாட்களில் அரசு பள்ளி சுவர்களை வண்ணம்பூசி விழிப்புணர்வு ஓவியங்களையும், இயற்கை காட்சிகளையும் ஓவியமாக தீட்டுகின்றனர். இந்த அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் பாண்டியன், ராஜசேகரன், சுரேஷ்கண்ணன், சித்தியேந்திரன், முருகன், சந்ரு, சசிக்குமார் ஆகியோருடன் இணைந்து தேவாரம் அரசு மேல்நிலைப் பள்ளியை புதுப்பொலிவாக்கி வருகிறோம். 'வகுப்பு தத்தெடுப்பு' திட்டத்தில் ஒவ்வொரு வகுப்பறையையும் சீர்படுத்தி, வண்ணம் பூசும் பணியை விருப்பமுள்ளவர்களின் நிதியுதவியுடன் செய்து வருகிறோம், என்றார்.
ஸ்மார்ட் திட்டங்கள்:
முன்னாள் மாணவர் கண்ணன்: பள்ளி கட்டடங்கள் சீரமைப்புக்கு நிதி தேவையென்று ஆசிரியர் தொடர்பு கொண்டனர். எங்கள் குடும்பத்தினர் சார்பில் 5 வகுப்பறைகளை தத்தெடுத்து புதுப்பிக்கும் பணி மேற்கொண்டோம். தற்போது உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணி நடக்கிறது. அடுத்த கட்டமாக மாணவர்களின் திறன்மேம்பாடுக்கு உரிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும். நகர்புற மாணவர்களுக்கு கிடைப்பது போன்ற 'ஸ்மார்ட்' திட்டங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைக்க நடவடிக்கைகளை முன்னாள் மாணவர்கள் முன்னெடுக்க வேண்டும், என்றார்.

0 Comments:

Post a Comment