ஏற்கெனவே இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து ஆதார் எண்ணை நீக்க முடியுமா?: ஏற்கெனவே இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள், தொலைத் தொடர்பு சிம் கார்டுகளில் இருந்து ஆதார் எண்ணை நீக்க முடியுமா என்று வங்கி வாடிக்கையாளர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அரசின் முக்கிய திட்டமான ஆதார் அட்டை திட்டம் மூலம் மத்திய அரசின் பல்வேறு சமூக நலத் திட்டங்களின் கீழ் பயன் பெறுவதற்கும், நேரடி மானியத் திட்டம், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டு, வருமான வரித் துறையின் பான் எண் அட்டை, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு, வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. அதற்கான காலக்கெடுவையும் அரசு நிர்ணயம் செய்தது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் அண்மையில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அந்தத் தீர்ப்பில் பான் அட்டை பெறுவதற்கும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கும், அரசின் மானியம், நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கும் ஆதார் எண் கட்டாயம் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு, தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டு பெறுவதற்கும், அதை இணைப்பதற்கும், சிபிஎஸ்இ, நீட் தேர்வு, யூஜிசி ஆகியவை, பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கெனவே அரசின் அறிவிப்பு காரணமாக வங்கிக் கணக்குகள், சிம் கார்டுகளுக்கும், பள்ளிகளுக்கும் என ஆதார் எண் வழங்கப்பட்டு அவை வங்கிக் கணக்குகள், சிம் கார்டுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
ஆதார் எண் இணைக்கவில்லை என்றால் வங்கிக் கணக்கை பயன்படுத்த முடியாது, சிம் கார்டுகள் செயல்படாது என்ற அச்சம் காரணமாக வங்கி வாடிக்கையாளர்கள், செல்லிடப்பேசி நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் தங்களுடைய ஆதார் எண்ணை இணைத்துவிட்டார்கள்.
வங்கிக் கணக்குகளுக்கு, சிம் கார்டுகளுக்கு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஆதார் கட்டாயமில்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் வங்கிக் கணக்குகள், சிம் கார்டுகளில் இணைக்கப்பட்டுள்ள தங்களுடைய ஆதார் எண்ணை அதிலிருந்து நீக்கிக் கொள்ள முடியுமா? என்ற கேள்வி வாடிக்கையாளர்களிடையே எழுந்துள்ளது.
அதேபோல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது வழங்கப்பட்ட மாணவர்களின் ஆதார் எண்களை திரும்பப் பெற முடியுமா? என்றும் பெற்றோர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. உச்ச நீதிமன்றமே கட்டாயமில்லை என்று உத்தரவிட்டுள்ள நிலையில் பழைய நிலையே தொடர வேண்டுமென வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர்.
அதனால் தங்களுடைய வங்கிக் கணக்குகள், சிம் கார்டுகளில் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண்ணை நீக்க வேண்டுமென்றும் விரும்புகின்றனர். வங்கி மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மூலம் ஆதார் தகவல்கள் திரட்டப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் அந்தத் தகவல்களைத் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர்.
எனவே, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி வங்கிக் கணக்கு, சிம் கார்டுகளுக்கு ஆதார் எண் கட்டாயமில்லை என்ற சூழ்நிலையில் வங்கிக் கணக்குகள், சிம் கார்டுகளில் இருந்து ஆதார் எண்ணை நீக்க வழிவகை செய்ய வேண்டுமென வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 Comments:

Post a Comment