மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை
மத்திய சமூகநீதித் துறை அமைச்சகம், 11ம் வகுப்பு முதல் முதுநிலை பட்டப்படிப்பு வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது!

‘போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் பார் டிசெபில்டு ஸ்டுடண்ட்ஸ்’
40 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் உயர்கல்வி கனவை பூர்த்தி செய்யும் விதமாக இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

தகுதிகள்
40 சதவீதத்திற்கும் அதிகமான குறைபாடுள்ள மாணவர்கள் மட்டுமே இந்த உதவித்தொகை திட்டத்திற்கு தகுதியானவர்கள் என்பதால் அதற்கான சான்றிதழை அரசு அதிகாரியிடம் பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 2.50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். தொலைநிலை கல்வி மூலம் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

உதவித்தொகை
கல்வி கட்டணத்திற்காக ஆண்டிற்கு ரூபாய் 1.50 லட்சம் உதவித்தொகையாக வழங்கப்படும். விடுதியில் தங்கி படிப்பவர் என்றால் பராமரிப்பு செலவிற்காக மாதம் 1,600 ரூபாயும், மற்றவருக்கு 750 ரூபாயும் வழங்கப்படும். இவைதவிர, ஆண்டிற்கு 4 ஆயிரம் ரூபாய் தரப்படும். மேலும், புத்தகங்கள் வாங்குவதற்காக ஆண்டிற்கு ரூபாய் 1,500 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
‘நேஷனல் ஸ்காலர்ஷிப் போர்டல்’ என்கிற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கேட்கப்பட்டுள்ள பிற சான்றிதழ்களை இணைத்துப் பதிவு செய்யவும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: அக்டோபர் 31

விபரங்களுக்கு: https://scholarships.gov.in/