Title of the document
பள்ளிகள் திறக்கும் முன்பே, காலாண்டு தேர்வு தேர்ச்சி விகிதம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்த அறிவிக்கப்பட்டு உள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், காலாண்டு தேர்வு, கடந்த 22ம் தேதி முடிவடைந்தது. ஒரு வாரம் விடுமுறைக்கு பின், பள்ளிகள் வரும் 3ம் தேதி திறக்கப்படுகிறது.  இந்த நிலையில் இன்று (28ம் தேதி) காலை 11 மணிக்கு, நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு காலாண்டு தேர்ச்சி பகுப்பாய்வு கூட்டம் சிஇஓ உஷா தலைமையில் நடக்கிறது. இதற்கு வரும்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது ஆசிரிய, ஆசிரியைகள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், வழக்கமாக காலாண்டு தேர்வு விடைத்தாள்கள், விடுமுறை நாட்களில் திருத்தப்பட்டு, பள்ளிகள் திறக்கும் முதல் நாளில் மாணவ, மாணவியருக்கு தரப்படும். விடைத்தாளில் மாணவர்கள் செய்துள்ள தவறுகள் அவர்களுக்கு விளக்கப்பட்டு, பொதுத்தேர்வில் அது போன்ற தவறுகள் வராதபடி பார்த்துக்கொள்ளப்படும். அதற்கு எந்த அவகாசமும் அளிக்காமல் பரிட்சை முடிய, முடிய விடைத்தாளை திருத்தி கொடுக்க வேண்டும் என ஆசிரிய, ஆசிரியைகளை கல்வித்துறை அதிகாரிகள் இப்போது கட்டாயப் படுத்தியுள்ளனர். இதனால் அவசர கோலத்தில் விடைத்தாளை திருத்தி முடித்துள்ளோம். விடைத்தாளில் மாணவர்கள் செய்துள்ள தவறுகளை, அவர்களுக்கு சுட்டிகாட்ட கூட நேரம் அளிக்கப்படவில்லை.
தமிழகத்திலேயே நாமக்கல் மாவட்டத்தில் தான் இப்படி புதிய முறைகள் கடைபிடிக்கப் படுகிறது. காலாண்டு விடுமுறைக்கு பின் தேர்ச்சி குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தினால், கல்வித்துறை அதிகாரிகளின் அறிவுரைகளை தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிந்து, அதற்கு ஏற்ப கற்பித்தல் பணியில் ஈடுபட முடியும் என்றனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், முதன்மை கல்வி அலுவலரின் உத்தரவுகளை செயல்படுத்துவது தான், எங்கள் வேலை. விடுமுறை நாளில் விடைத்தாளை திருத்தி, பள்ளிகள் திறக்கும் போது மாணவர்களிடம் அளித்து, அதற்கு பின் தான் தேர்ச்சி விகிதம் குறித்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைப்போம். இந்த ஆண்டு அவசர, அவசரமாக தேர்ச்சி விகிதம் தயாரித்து, அனுப்பி வைத்துள்ளோம் என்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post