Title of the document
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்விக்கு சேர்க்கை விவகாரத்தில் கல்வியாளர்கள், பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்து இறுதி முடிவெடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்வியாளரும் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளருமான பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் மட்டுமே உயர்கல்வி சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு மாணவர் நலம் சார்ந்து அமையவில்லை. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுவதில்லை. தேவைக்கு ஏற்ப ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உருவாக்கப்படுவது கிடையாது. இத்தகைய சூழலில் எப்படி அனைத்து மாணவர்களுக்கும் சமமான கற்றல் வாய்ப்பை அளிக்க முடியும்,

மேல்நிலை பொதுத்தேர்வு குறித்த அரசாணை அரசுத்தேர்வு இயக்ககம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோ சனைகளை விவாதித்து உயர்மட்டக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் வெளியிடப்பட்டது.
எனவே, அந்த குழு அளித்த பரிந்துரை அளித்து வெளியிடப்பட்ட அரசாணையில் மாற்றம் செய்ய வேண்டுமானால் குழுவுடன் விவாதித்துத்தான் முடிவுகள் மேற்கொள்ள முடியும். தன்னிச்சையாக முடிவெடுக்க இயலாது.
எனவே, மேல்நிலை பொதுத் தேர்வுகளில் மாற்றம் செய்து வெளியிடப்பட்ட அரசாணை (பிளஸ் 2 மதிப் பெண் அடிப்படையில் உயர்கல்விக்கு சேர்க்கை) முற்றிலும் அவசரகதியில் நியாயமற்ற முறையில் வெளியிடப்பட்ட அரசாணை ஆகும்.
இது தனியார் பள்ளிகளின் லாபவேட்கைக்கு துணைபோகவே பயன்படும். இது உயர்மட்டக் குழுவை அவமதிக்கும் செயல். மாணவர்களின் உண்மையான கல்வி வளர்ச்சிக்கு உதவாது. எனவே, புதிய அரசாணையை திரும்பப் பெற வேண்டும். கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் அமைப்பினர் உள்ளிட்டோரின் கருத்துகளை கேட்டறிந்து உயர்மட்டக்குழுவில் வைத்து இறுதி முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post