தமிழக அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு: ஜூலை முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர் களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த உயர்வு ஜூலை முதல் கணக்கிட்டு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு அலுவலர்களுக்கு இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் கூடுதல் தவணையாக 2 சத வீதம் அகவிலைப்படி உயர்த்தப் பட்டது. அதன் அடிப்படையில் தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் கூடுதல் தவணையாக 2 சதவீதம் அளிக் கப்படும். இதன்மூலம் தற்போ துள்ள 7 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாக அகவிலைப்படி உயர்த்தப்படும்.

இந்த அகவிலைப்படி உயர்வு அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, தொழில்நுட்ப கல்விக் குழு சம்பள வீதங்களின் கீழ் வரும் அலுவலர்களுக்கும் வழங்கப்படும்.
மேலும், அரசு மற்றும் உதவி பெறும் பல் தொழில்நுட்ப பயிற்சிப் பள்ளிகள், சிறப்பு பட்டயப்படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குநர்கள், நூலகர்களுக்கும் இந்த உயர்வு வழங்கப்படும். இதனால் அரசு ஊழியர்களுககு ரூ.314 முதல் ரூ.4,500 வரையும் ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு ரூ.157 முதல் ரூ.2,250 வரையும் உயர்வு கிடைக்கும்.

0 Comments:

Post a Comment