Title of the document

ஒரே காம்பவுண்டுக்குள் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை படிக்கும் வகையில் முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒன்று வீதம் பள்ளிகளின் கட்டமைப்பை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அரசு,  அரசு நிதியுதவி, சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. இதில் 25 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 3,000 உயர்நிலைப்பள்ளிகளும், 2,800 மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.  அரசு, அரசு நிதியுதவி மட்டுமின்றி சுயநிதி தொடக்கப்பள்ளிகளில் சேரும் குழந்தைகளும் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன், 6ம் வகுப்புக்கு வேறு பள்ளிக்கு மாற வேண்டிய நிலை உள்ளது. அதேபோல் நடுநிலைப்பள்ளிகளில்  படிக்கும் பிள்ளைகள் 9ம் வகுப்புக்கு வேறு உயர்நிலைப்பள்ளிக்கோ, மேல்நிலைப்பள்ளிக்கோ மாற வேண்டிய கட்டாயம் உள்ளது. 

இதற்கு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகள் தனித்தனி வளாகங்களாக இயங்குவதே காரணம். இதில் நிலவும் நடைமுறை சிக்கல்களால் கிராமப்புற பெற்றோர், மாற்றுச்சான்றிதழ் பெற்று  படிப்பை தொடருவதற்கான முயற்சியை எடுக்காமல் தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றனர். இதுபோன்ற நிலையை தவிர்க்க, ஒரே காம்பவுண்டுக்குள் எல்கேஜி முதல் பிளஸ்2 வரை வகுப்புகளை கொண்டு  பள்ளிகளை கட்டமைக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, ஆந்திர மாநிலத்தில் மாவட்டத்துக்கு ஒரு மாதிரி பள்ளி இதுபோன்ற கட்டமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று தமிழகத்திலும் முதல்கட்டமாக மாவட்டத்துக்கு ஒரு பள்ளி எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை நவீன கட்டமைப்புகளுடன் ஏற்படுத்தப்படுகிறது. பள்ளிகளின் செயல்பாட்டை தொடர்ந்து வட்டார அளவில் இது  விரிவாக்கப்படும். 

இதுதொடர்பாக, சமீபத்தில் முதன்மை செயலர் பிரதீப்யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் தமிழை முதன்மை மொழியாக கொண்டு, ஆங்கில வழி பள்ளியாக  தொடங்குவது என்றும் இந்த  கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. அப்போது, இத்திட்டத்தை உடனே செயல்பாட்டுக்கு கொண்டு வரும் நிலையில் ஏற்படும் அரசியல்ரீதியான எதிர்ப்புகளை சமாளித்து இதனை வெற்றிகரமான திட்டமாக்குவது என  கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது பல பள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். இதனால் ஆயிரம் பள்ளிகளுக்கு மேல் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மூடப்படும் என்று  தெரிகிறது.

பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டும் குறிப்பிட்ட சதவீதத்துக்கும் அதிகமான அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 10க்கும் குறைவாகவே உள்ளது. இங்கு இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்கு  மட்டுமே மாதம் 1.5 லட்சம் வரை ஊதியமாகவும், பள்ளிகளுக்கான இதர செலவினங்களும் என அரசுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது. இதனை காரணமாக காட்டியே 3,003 பள்ளிகளுக்கு மத்திய அரசின் நிதியும்  நிறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களுக்காகவே எல்கேஜி முதல் பிளஸ்2 வரை வகுப்புகளை கொண்ட பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்த அரசு ஆர்வம் கொண்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post