பள்ளியில் கடந்த 14 ஆண்டுகளாக விடுப்பே எடுக்காமல் சாதித்த மாணவி சிறப்பான வருகை பதிவுக்கான விருது பெற்றார்
மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் 14 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பள்ளிக்குச் சென்று சிறப்பான வருகைப் பதிவுக்கான விருதைப் பெற்றுள்ளார்.

மதிப்பெண், பிற சாதனைகளை ஊக்குவிக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரும் மாணவ, மாணவியரையும் உற்சாகப்படுத்தி விருது வழங்கி வருகின்றன. மதுரையைச் சேர்ந்தவர் அருஞ்சுனை(45). சுய தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி நவீனா. இவர்களது மகள் கார்த்திகா(18).
இவர் கேஜி வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் விடுப்பே எடுக்காமல் சாதித்துள்ளார். கே.கே. நகரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 வரை படித்த இவர், தற்போது மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கிறார்.

கடந்த 14 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவி கார்த்திகாவுக்கு தனியார் பள்ளி நிர்வாகம் விருது வழங்கி உள்ளது.
இதுகுறித்து மாணவி கூறியதாவது: கேஜி வகுப்பில் சேர்த்தபோது, சில குழந்தைகள் வருகைப் பதிவு விருது வாங்குவதை எனது தாயார் மூலம் அறிந்தேன். இதனால் அந்த விருதை வாங்கத் திட்டமிட்டேன். பள்ளி நாட்களில் குடும்ப நிகழ்ச்சிகள் நடந்தாலும் அதில் பங்கேற்காமல் பள்ளிக்குச் சென்று விடுவேன்.
விடுமுறை நாளிலோ, மாலையிலோ உறவினர் வீடுகளுக்குச் சென்று வருவேன். நான்காம் வகுப்பு படிக்கும்போது விபத்தில் கை எலும்பு முறிந்தது. அப்போது கையில் மாவுக்கட்டு போட்டுக் கொண்டு பள்ளிக்குச் சென்றேன்.
விடுமுறை இன்றி அனைத்து வகுப்புகளிலும் பங்கேற்றதால்தான் பிளஸ்-2 வில் அதிக மதிப்பெண் எடுக்க முடிந்தது. இந்த முயற்சிக்கு எனது தாயாரின் ஒத்துழைப்பே முழு காரணம் என்றார்.

0 Comments:

Post a Comment