படைப்பாற்றலில் முன்னேறிய இந்தியா!



புதிய கண்டுபிடிப்புகளைப் படைப்பதில் சர்வதேச அளவில் இந்தியா ஏற்றம் கண்டுள்ளது.

உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நாடுகளுக்கு ஜிஐஐ குறியீடு (GII - Global Innovation Index) வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் 2015ஆம் ஆண்டு முதல் இந்தியா முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. எனினும் சீனா உள்ளிட்ட இதர போட்டியாளர்களுக்கு நிகராக செயல்புரிய இந்தியா மேலும் பல குறியீடுகளில் முன்னேற்றத்தை அடைய வேண்டும். மொத்தம் 126 நாடுகள் அடங்கிய GII தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ஆம் தேதியன்று நியூயார்க் நகரில் வெளியிடப்பட்டது. இதில் நடப்பு ஆண்டில் இந்தியா 57ஆவது இடத்திலும், சீனா 17ஆவது இடத்திலும் உள்ளன. முந்தைய ஆண்டில் இந்தியா 60ஆவது இடத்திலும், சீனா 22ஆவது இடத்திலும் இருந்தன.

இத்தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் நெதர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா, பின்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, அயர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்தப் பட்டியலை உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு வெளியிட்டுள்ளது. அறிவுசார் சொத்துரிமை பதிவு விகிதம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மொபைல் செயலிகள் உருவாக்கம், ஆன்லைன் படைப்பாற்றல், கணினி மென்பொருளுக்கான செலவுகள், கல்விக்கான செலவுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வெளியீடுகள், தொழில் தொடங்குதல் உள்ளிட்ட 80 குறியீடுகளின் அடிப்படையில் GII குறியீடு மதிப்பிடப்படுகிறது.