மாணவர்கள் இல்லாத அரசுபள்ளிக்கு பூட்டு; ஆசிரியர்கள்இடமாற்றம் By நாமக்கல் First Published : 30 July 2016 07:56 AM ISTஒரு மாணவர் கூட இல்லாததால், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய தலைமையாசிரியர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மோகனூர் ஊராட்சி ஒன்றியம், குமரிபாளையம் ஊராட்சிக்குள்பட்ட அய்யம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளித் தலைமை ஆசிரியராக ராணியும், உதவி ஆசிரியராக உமாராணியும் பணியாற்றினர்.
இப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 5-ஆம் வகுப்பில் மட்டும் 6 மாணவ, மாணவியர் படித்து வந்தனர். அவர்கள் படிப்பை முடித்து மாற்றுச் சான்றிதழ் பெற்று 6-ஆம் வகுப்பில் சேர்ந்தனர்.
அதைத் தொடர்ந்து நிகழ் கல்வி ஆண்டில் அதே பகுதியைச் சேர்ந்த தரணிஷா என்ற மாணவி முதல் வகுப்பில் சேர்ந்தார். அந்த ஒரு மாணவியையும் அவரது பெற்றோர் கடந்த 14-ஆம் தேதி மாற்றுச்சான்றிதழைப் பெற்று அருகில் உள்ள சின்னதம்பிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர். அதையடுத்து பள்ளியில் மாணவர் யாரும் இல்லாததால் பள்ளி தாற்காலிகமாக மூடப்பட்டது.
பள்ளியின் உதவி ஆசிரியர் உமாராணி ஓலப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கும், தலைமை ஆசிரியர் ராணி சின்னகரசப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கும் தாற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் இந்திராகாந்தி கூறுகையில், அய்யம்பாளையம் ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லாததால் அந்தப் பள்ளி தாற்காலிகமாக மூடப்பட்டது என்றார்.