மொரப்பூர் AEEO வை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்-தினமலர்

தருமபுரி;
மொரப்பூரில் உதவி தொடக்க கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மொரப்பூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜீவாவை கண்டித்து, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்,நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மொரப்பூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட செயலாளர் குமாரசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்ட ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜீவா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: 'மொரப்பூருக்கு இடமாறுதல் பெறுவதற்கு, மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து வந்ததாகவும், அந்தப் பணத்தை உங்களிடம் தான் வசூல் செய்ய வேண்டும்' எனக்கூறி வருகிறார். பணம் பெற்றுக்கொண்டு தம் விருப்பம் போல மாற்றுப் பணியில் ஆசிரியர்களை நியமனம் செய்கிறார். அரசுப் பள்ளிகளை பார்வையிட வரும்போது, ஆசிரியர்களை ஒருமையிலும், தகாத வார்த்தையிலும் இழிவாகத் திட்டுகிறார். ஆசிரியர்களுக்கு தேவையான சம்பளச் சான்றுகளை வழங்க காலம் தாழ்த்தி வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.