>
> திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் தோக்கவாடியை சேர்ந்தவர் ராஜாஆட்டோ டிரைவர். இவரது மனைவி உஷா. மகன் சூரியா இவர்கள் மூன்று பேரும் நெருங்கிய உறவினர் திருமணத்துக்காக நகை வாங்க செங்கம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பொருள்கள் வாங்க வந்தனர். அப்போது கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் கடைத் தெருவில் நின்றபடி நடுரோட்டில் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த செங்கம் போலீஸ்காரர்கள் நம்வாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகியோர் ராஜா மற்றும் அவரது மனைவியிடம், ஏன் நடுரோட்டில் நின்று சண்டை போட்டு கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டனர்.
>
> அதற்கு இருவரும், இது எங்கள் வீட்டுப்பிரச்னை. நாங்கள் சண்டை போட்டுக் கொள்வோம். சேர்ந்துகொள்வோம். நீங்கள் ஏன் இதை கேட்கிறீர்கள்? என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த போலீசார், எங்களிடமே திமிர் பேச்சா? என்று கேட்டபடி கணவன், மனைவி, மற்றும் இதனை தடுக்க வந்த அரவின் மகன் என மூவரையும் லத்தியால் சரமாரியாக தாக்கினர். இந்த நிகழ்வு அங்கிருந்த பலர் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் சமுக வலைதளங்கள், டிவி உள்ளிட்ட ஊடகங்களில் செய்தி வெளியானது.
>
> இந்நிலையில் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ராஜா சார்பில் அவரின் வக்கீல் தாக்கல் செய்த மனுவில், நான் ஆட்டோ டிரைவராக உள்ளேன். கடந்த 11-ம் தேதி மதியம் செங்கம் மார்க்கெட் பகுதியில் உள்ள முடிதிருத்தும் கடைக்கு எனது மகன் சூர்யா சென்றார். அந்த நேரத்தில் அந்த இடத்தில் எனக்கும், எனது மனைவி உஷாவுக்குமிடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது செங்கம் சப் இன்ஸ்பெக்டர் முருகன், கான்டபில் நம்மாழ்வார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் எங்களிடம் ஏன் இங்கு நின்று தகராறில் ஈடுபடுகிறீர்கள்? என்றனர். அப்போது நான் அவர்களிடம் பணிவான முறையில் குடும்பத்தகராறு என பதிலளித்தேன். ஆனால் அவர்கள் திடீரென எதிர்பாராத விதமாக என் கன்னத்தில் அறைந்தனர். இதைப்பார்த்த எனது மகன் சூர்யா ஏன் அடிக்கிறீர்கள் என கேள்வி கேட்டார். உடனே எனது மகனையும் அடித்தனர். இதைக்கண்ட எனது மனைவி அவர்களை தடுத்தார். உடனே அவர்கள் 3 பேரும் சேர்ந்து எங்கள் மூவரையும் நடுரோட்டில் வைத்து காட்டுமிராண்டித்தனமாக லத்தி மற்றும் கைகளால் அடித்தனர்.
>
> மேலும் இது குறித்து கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டினர். எனது மனைவியின் ஆடைகளை கிழித்தனர். இதைப்பார்த்த பொதுமக்கள் துண்டு கொடுத்து காப்பாற்றினார். இந்த சம்பவத்தை அடித்த அவர்களே வீடியோவும் எடுத்தனர். பொதுமக்களும் தங்களின் செல் போனில் வீடியோ எடுத்தனர். இந்த சம்பவம் அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பானது. உடனே சம்பந்தப்பட்ட செங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் என்னிடம் பணம் கொடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் கூறினார். அதை வாங்க மறுத்ததால் அவரே 4 போலீஸாரை அனுப்பி சிகிச்சை பெற வைத்தார். அன்று இரவு 7 வரை எங்களுக்கு உணவு எதுவும் தரவில்லை. யாருடனும் தொடர்பாக கொள்ள எங்களை அனுமதிக்கவில்லை. அதனை தொடர்ந்து டிஎஸ்பி ஷாஜி என்பவர் வந்து இந்த சம்பவத்தை பெரிதாக்க வேண்டாம் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளிப்பதாக தெரிவித்தார்.
>
> பின்னர் செங்கம் அரசு மருத்துவமனையில் எங்களை பரிசோதித்த டாக்டர், உடனடியாக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். வலியால் 3 பேரும் அன்று இரவு முழுவதும் துடித்தேம். எனது மகன் இந்த தாக்குதலால் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் பாதிக்கபட்டு உள்ளார். எனவே எங்களை தாக்கி போலீஸ் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்களை சஸ்பென்ட் செய்ய மாவட்ட போலீஸ் எஸ்.பிக்கு உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட எங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
>
> இந்த மனு இன்று ஐகோர்ட் நீதிபதி பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.
Post a Comment