Title of the document
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், சிறப்புப் பள்ளிகள் மற்றும் வீடுகளில் உள்ள மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் 4,218 பேரை கண்டறிந்து அவர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்தார்.
திருவள்ளூர் பெரியகுப்பம் டி.இ.எல்.சி. பள்ளி வளாகத்தில், மாவட்ட அளவிலான மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வில்,  ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்துப் பேசியது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை மூலம் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் குறித்து கணக்கெடுக்கும் பணி அக்டோபர் 31-ஆம் தேதி வரையில் நடைபெறவுள்ளது. பிறந்த குழந்தை முதல் 18 வயதுக்குள்பட்ட மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை கண்டறிய இச்சிறப்பு முகாம் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த முகாம்களில், குழந்தைகளின் மாற்றுத்திறனை அளவீடு செய்து மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும், மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்படும். மேலும், இந்த முகாமில் அவர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளும், அவர்களின் இயல்பு வாழ்க்கைக்காக உபகரணங்களும் வழங்கப்படும்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகளில் மாற்றுத்திறன் கொண்ட 4,218 குழந்தைகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களில் 409 மாணவர்கள் புதியதாகக் கண்டறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் புற உலகச் சிந்தனையற்றோர், மூளை முடக்குவாதம், குறை பார்வை, மன வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுடைய மாணவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளில் முறையான பள்ளிகளில் இருந்து 2,677 குழந்தைகளும், சிறப்புப் பள்ளிகளில் 869 குழந்தைகளும், வீட்டுவழிப் பயிற்சியில் 456 குழந்தைகளும், பள்ளி ஆயத்தப் பயிற்சியில் 216 குழந்தைகளும் ஆக மொத்தம் 4,218 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
எனவே இந்த முகாமில் தங்கள் குழந்தைகளை பதிவு செய்து கொள்ள விரும்புவோர், குழந்தையின்  4 புகைப்படங்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்கி பதிவு செய்து கொள்வது அவசியம். இதை மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் பெற்றோர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான தேசிய அடையாளஅட்டைகளையும் அவர் வழங்கினார். இந்த முகாமில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த. ராஜேந்திரன், ஊரகப்பணிகள் மற்றும் குடும்ப நலத்துறை   இணை இயக்குநர் பி.வி.தயாளன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post