அறிவுத் தூண்டுகோல்களுக்கு....
அகரம் சொல்லித் தந்த சிகரங்களே
உங்களுக்கான வாழ்த்துப்பாவினையும்
அதிலிருந்தே தொடங்குகிறேன்
அறிவின் துளிகளை அள்ளிவந்து
வகுப்பறையெங்கும் புதுமை செய்கிற
அற்புத வித்தகர்கள் நீங்கள்
கை பிடித்து
சொல்லித் தந்து தான்
கைதூக்கி விடுகிறீர்கள்
களிமண்ணையும் வண்ணங்கள்
குழைத்து பெருஞ்சிற்பமாக்கும்
அருஞ்சிற்பிகள் நீங்கள்..
படி படி என பாடஞ்சொல்லும் நீங்கள்
தெய்வத்தினும் ஒரு படி மேல் தான்
நீங்கள் அறியாமை இருளகற்றும் அறிவுச்சூரியன்கள்
உங்கள் பலகை பாடம் தான் பல கைகளை உயர்த்தியது
இருட்டுக்கே வெள்ளையடிக்கிற
உங்கள் நல்லமனசு தான்
கடைசிபெஞ்சு மாணவனின்
உள்ளத்தையும் கொள்ளையடித்தது
விமர்சனங்கள் ஆயிரம் வந்தாலும்
சரிசமமாய் ஏற்கிற சாதகப் பறவைகள் நீங்கள்
கறை பூசுதல் எளிது
ஏசுதல் எளிது பரிகசித்தல் எளிது
இவையாவும் கடந்து நீங்கள்
பாலநெஞ்சங்களிடம் காட்டும்
அக்கறை தான் அளவிடற்கு அரிது
தேசம் சந்திக்கிற ஒவ்வொரு
கசப்பான சம்பவங்களிலும்
இறுதியாய் உதிர்க்கிற ஒற்றைக்கருத்து
ஆசான்களின் கைகள் கட்டப்பட்டதே
இக்கொடூரங்களுக்குக் காரணம் என்பதாய் இருக்கும்...
எது எப்படி இருப்பினும்
எண்ணமெலாம் மாணவர்
நலனிலேயே நிமிடங்களை
நகர்த்துகிற நல்லாசான்களே
இப்பெருவுலகில் ஏதோ ஒரு
குழந்தையின் மனதில் நிச்சயம்
எழுதப்பட்டுருக்கும் உங்களுக்கான
நல்லாசிரியர் என்ற உயர்விருது
அந்த அங்கீகாரத்தை மனதில் வைத்தே
இன்னுஞ் சிறப்பாய் பணிசெய்யுங்கள்
மாற்றத்தின் மகாத்மாக்களே
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்
சீனி.தனஞ்செழியன்,
முதுகலைத்தமிழாசிரியர்,
அஆமேநிப, திருவலம்.
வேலூர் மாவட்டம்.
மிகவும் நன்றாக உள்ளது ஒவ்வொரு வரிகளும் அருமை நன்றிகள்
ReplyDeleteVery super
ReplyDeleteArumai,🙏🙏🙏
ReplyDeleteThanks for you
ReplyDeleteஎன்ன ஒரு அருமையான பதிவு
ReplyDeletePost a Comment