Title of the document

பள்ளிகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாம் கேட்கும் நிதியை அரசு முழுமையாக அளிக்காது. இது போன்ற சூழ்நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் மூலமாக வரும் நிதியைத்தான் பயன்படுத்துவார்கள். 
* பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பெரும்பலான அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் சங்கங்கள் உள்ளன. அந்த அமைப்பின் மூலமாக முன்னாள் மாணவர்களிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன.


சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து  முடித்த மாணவ, மாணவிகளை கொண்டு தொடங்கப்பட்ட முன்னாள் மாணவர்கள் குழுக்கள்  தற்போதைய நிலைமை  என்ன என்று மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 119 தொடக்கப்பள்ளிகள், 92 நடுநிலைப்பள்ளிகள், 38 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 32 மேல்நிலைப்பள்ளிகள், 200 மழையர் பள்ளிகளும் செயல்படுகின்றன. இந்தப் பள்ளிகளில் 2018 - 2019ம் கல்வியாண்டியில் 85,910 மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளிகளில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவ - மாணவிகள் 12ம் வகுப்பு முடித்து வெளியே வருகின்றனர். 

இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வி படிக்க செல்கின்றனர். அப்படி உயர்கல்வி படிக்க செல்லும் மாணவர்களுக்கும் சென்னை மாநகராட்சி சார்பில் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, பொறியியல் மற்றும் கலை அறிவியல் படிப்பில் சேரும் தலா 300 மாணவர்கள், பட்டயப் படிப்பு, ஆசிரியர் பட்டயப்படிப்பு மற்றும் செவிலியர் படிப்பில் சேரும் 150 மாணவர்கள், சட்டப்படிப்பில் சேரும் 15 மாணவர்கள், ஒருங்கிணைந்த பட்டப் படிப்பில் சேரும் 10 மாணவர்கள் என்று மொத்தம் 475 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து நல்ல நிலையில் இருக்கும் மாணவர்களை எல்லாம் இணைத்து பழைய மாணவர் சங்கத்தை அமைக்க வேண்டும் என்று மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். 

ஆனால் அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் எடுக்காமல் இருந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த மாணவர்கள் சென்னை பள்ளியின் முன்னாள் மாணவராக இணைவதற்கான வசதியை 2014ம் ஆண்டு மாநகராட்சி கல்வித்துறை தொடங்கியது. மாநகராட்சி இணையத்தில் “சென்னை ஸ்கூல்ஸ்” என்ற பிரிவில் இதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டது. அதில் பெயர், பிறந்த தேதி, வயது, முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல்  முகவரி, தற்போதைய கல்வித் தகுதி, தற்போதைய பணி நிலை, கடைசியாக படித்த மாநகராட்சி பள்ளியின் முகவரி மற்றும் ஆண்டு, அதற்கான சான்று உள்ளிட்ட தகல்களை பதிவேற்றம் செய்து முன்னாள் மாணவராக இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆன்லைனில் பதிவு செய்ய இயலாத மாணவர்கள் ரிப்பன் மாளிகை வளாகத்தில் கல்வித் துறையில் விநியோகிக்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த குழுக்கள் என்ன நிலைமையில் உள்ளது, அவர்களில் எத்தனை மாணவர்களை இணைந்துள்ளார்கள் என்ற தகவல்கள் எதுவும் தங்களுக்கு தெரிவிக்கப்டுவதில்லை என்று மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: பள்ளிகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாம் கேட்கும் நிதியை அரசு முழுமையாக அளிக்காது. இது போன்ற சூழ்நிலையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் மூலமாக வரும் நிதியைத்தான் பயன்படுத்துவார்கள். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் பெரும்பலான அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள் சங்கங்கள் உள்ளன. அந்த அமைப்பின் மூலமாக முன்னாள் மாணவர்களிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன. இதைத் தவிர்த்து உறுப்பினர் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

இதன் மூலம் வரும் தொகையை வைத்து அந்தப் பள்ளிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளை அவர்களே செய்து கொள்கின்றனர். எனவேதான் மாநகராட்சி பள்ளிகளில் இது போன்ற அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைத்தோம். இதனைத் தொடர்ந்து இது போன்ற ஒரு வசதியை ஏற்படுத்த போவதாக 2014ம் ஆண்டு மாநகராட்சியின் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு இணையதளமும் தொடங்கப்பட்டது.

இதன்பிறகு இது தொடர்பான எந்த தகவலையும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்புவதில்லை. குறிப்பாக இதுவரை எத்தனை மாணவர்கள் அதில் இணைந்துள்ளனர். அவர்கள் தொடர்பான விவரங்கள் சம்பந்தபட்ட பள்ளிக்கு தெரிவிக்கப்பட்டதா? உள்ளிட்ட எந்த தகவலையும் கல்வித் துறை அதிகாரிகள் எங்களுக்கு தெரிவிப்பதில்லை. இதனால் பெரும்பாலான பள்ளிகளில் அந்தக் குழுக்கள் அமைக்கபடாமல் உள்ளன. எனவே உடனடியாக அனைத்து பள்ளிகளிலும் முன்னாள் மாணவர் குழுக்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post