Title of the document

ஒன்றிய அரசை கண்டித்து பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிக்கை !!

ஒன்றிய  அரசை கண்டித்து பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டு அறிக்கை

தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ அமல்படுத்தினால் தான் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டிய நிதியை விடுவிப்போம் என ஒன்றிய பாஜக அரசின் கல்வி அமைச்சர் கூறியிருப்பதை  பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு வன்மையாக கண்டிக்கிறது.

கல்வி என்பது அந்தந்த மாநிலங்களின் பண்பாடு, கலாச்சாரத்தோடு தொடர்பு உடைய விசயமாகும். இதில் ஒன்றிய அரசு தலையிடுவது ஏற்றுக் கொள்ள முடியாது. தேசிய கல்வித் திட்டமாகட்டும், அதன் கூறுகளில் ஒன்றான PMSHRI திட்டமாகட்டும் மறைமுகமாக இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிப்பதாகும்.

தாய்மொழி தமிழ் மற்றும் தொடர்பு மொழி ஆங்கிலம் இருக்கும் போது மூன்றாவது மொழியை கட்டாயம் படித்தாக வேண்டும் என்பது மாணவர்களுக்கு சுமையாக அமைவதோடு, தேவையில்லாத ஒன்றாகும்.

இந்நிலையில் தேசிய கல்வி கொள்கை 2020 ஐ அமல்படுத்தவில்லை என்ற காரணத்தை கூறி தமிழ்நாட்டு பள்ளிக் கல்வித் துறைக்கு விடுவிக்க வேண்டிய ரூபாய் 2,151/- கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு விடுவிக்காமல் பெரியண்ணன் மனப்பாண்மையில் நடந்து கொள்கிறது.

இந்தியா என்பது பல மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பாகும். இந்நிலையில் ஒன்றிய அரசின் இந்தப் போக்கு கூட்டாட்சி தத்துவத்திற்கே எதிரானதாகும்.

ஒன்றிய அரசின் இந்த ஆணவப் போக்கால் அரசுப் பள்ளிகளில் பயிலும் 40 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களும், சமகரசிக்‌ஷா திட்டத்தின் கீழ் பணிபுரியும்  ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களும் என 32000 பேர் ஊதியம் இன்றி பாதிப்படைவார்கள்.

கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு ஒன்றிய அளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே நம் மாநில கல்வித்திட்டத்தை தான் இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்பதை ஒன்றிய கல்வி அமைச்சர் தரமேந்திர பிரதான் அவர்களுக்கு வேண்டுகோளாக வைக்கும் அதே நேரத்தில் விரைவில் தமிழ்நாடு அரசுக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை என்றால் பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பிற ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பெற்றோர்களை திரட்டி ஒன்றிய அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கின்றோம்.



இப்படிக்கு

வெ.முருகதாஸ்,

ப.பாபு,

சே.முரளி,

பழ.கெளதமன்

ஒருங்கிணைப்பாளர்கள்,

பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post