Title of the document

கடந்த ஓராண்டாக ஆசிரியர்களே வராத அரசு பள்ளியில் பாடம் நடத்திய கிராம மக்கள் !!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ளது பரளிபுதூர் ஊராட்சி. இங்கு 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் படிப்பதற்காக 1 கி.மீ. தூரத்தில் பரளிபுதூரில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று வந்தனர்.

இதனால் தங்கள் பகுதிக்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை மாணவர்கள் படிக்க தொடக்கப் பள்ளி அமைக்க கோரி கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

இதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் 2023-ம் ஆண்டு டிசம்பரில் பரளிபுதூரில் ரூ.39 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கொண்ட பள்ளி கட்டப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது.

ஆனால் பள்ளி திறக்கப்பட்டு 1 வருடம் ஆகியும் பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்களும், பள்ளி மாணவர்களும் இன்று காலை பள்ளி முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததை கண்டித்தும், உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்க கோரியும் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தேசிய கொடியை ஏற்றி வைத்தனர். பின்னர் மாணவ-மாணவிகளை வகுப்பறைக்குள் அமரவைத்து கிராமத்து இளைஞர்களே பாடம் நடத்தினர். போராட்டம் நடப்பது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில்,

1 வருடமாக குழந்தைகள் எந்தவித படிப்பறிவும் இல்லாமல் வெறுமனே பள்ளிக்குச் சென்று வீடு திரும்பி வருகின்றனர். இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக ஆசிரியர்களை நியமித்து மாணவர்களின் நலனை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post