Title of the document

Motivational Speech என்ற பெயரில் அரசு பள்ளியில் "மஹாவிஷ்ணு" மூடநம்பிக்கை பேச்சு - தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு !!

சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாதை அரசு மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணிக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரகம் பிறப்பித்துள்ளது.

முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை அசோக்நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னம்பிக்கைப் பேச்சாளராக அறியப்படும் மஹாவிஷ்ணு என்பவர் ஒரு நிகழ்ச்சி நடத்தினார். மாணவிகள் மத்தியில் உத்வேகப் பேச்சு வழங்க வந்தவர் பாவ, புண்ணியம், முன்ஜென்ம பலன்கள் பற்றி பேசினார். மேலும் மாற்றுத்திறனாளியாகப் பிறக்க முன்ஜென்ம பாவ வினைகளே காரணம் என்றும் கூறினார். இது தொடர்பான வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. மேலும் அந்த வீடியோவில் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பள்ளியின் ஆசிரியருடன் அவர் வாக்குவாதத்திலும் ஈடுபடுவதும் பதிவாகியிருந்தது. மாற்றுத்திறனாளியான அந்த ஆசிரியருடன் அவர் வாக்குவாதம் செய்தது இணையவெளியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்நிலையில் இது பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுத்தது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை பள்ளியின் முன்னாள் பல்வேறு மாணவர் சங்கங்களைச் சேர்ந்தோரும் திரண்டு, ‘பள்ளியில் பிற்போக்குத்தனமான உரையை அனுமதிப்பதா’ என கண்டனம் தெரிவித்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

தொடர்ந்து பள்ளியில் மாணவிகளுக்கு பொதுத் தேர்வை எதிர்கொள்வது குறித்து அறிவுரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமைச்சர், “பள்ளி நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி. அனைத்து பள்ளிகளுக்கும் பாடமாக இருக்கும் வகையில் அந்த நடவடிக்கை அமையும்.” என்றார்.

முன்னதாக ஊடகப் பேட்டியில் பள்ளியின் தலைமை ஆசிரியை, “பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வு நடத்தப்படவில்லை. அது மாணவிகளுக்கு உத்வேகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி” எனக் கூறியிருந்தார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post