Title of the document

விலக்கு பெற்றவர்களுக்கும் வருமான வரி சம்பள 'Portal' தொடருது குளறுபடி - ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் புலம்பல்


ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு IFHRMS என்ற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பில் (சம்பள போர்ட்டல்) சம்பளம், பணப் பலன்கள், வருமான வரி பிடித்தம் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான உள்ளீடுகள் இல்லாததால் விலக்கு பெற்றவர்களுக்கும் வருமானவரி பிடித்தம் செய்யப்படுகிறது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அவர்கள் வருமானத்தில் இருந்து செலவுகளை கணக்கிட்டு அதற்கு ஏற்ப நிதியாண்டு துவக்கத்தில் புதிய அல்லது பழைய வருமான வரித்திட்டத்தை தேர்வு செய்வர். ஆனால் புதிய நடைமுறையாக ஒவ்வொரு மாதமும் செயலி மூலம் விவரம் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையென்றால் புதிய வருமான வரித் திட்டத்தின்படி பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சம்பள 'போர்ட்டலில்' அதற்கான போதிய உள்ளீடுகள் இல்லாததால் பழைய வருமான வரித் திட்டத்தில் விவரம் தாக்கல் செய்தாலும் புதிய வருமானவரி திட்டத்தில் தான் பிடித்தம் செய்யப்படுகிறது. இதில் குளறுபடிகள் ஏற்படுவதால் வருமான வரி எவ்வளவு பிடித்தம் செய்யப்படுகிறது என்ற விவரம் சம்பந்தப்பட்டவர்களே அறிந்துகொள்ள முடிவதில்லை.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: பழைய வருமான வரிப்படி விவரங்கள் பதிவேற்றம் செய்யும் போது சேமிப்பு, வீட்டுக்கடன், மருத்துவக் காப்பீடு, மாற்றுத்திறனாளி நிலை குறித்த உள்ளீடுகளை சம்பள 'போர்ட்டல்' ஏற்பதில்லை. இதனால் புதிய வரி முறையில் தான் பிடித்தம் செய்யப்படுகிறது.

இதனால் பணப்பலன்களில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் வரி விலக்கு பெற்ற ஆசிரியப் பணியிலுள்ள பாதிரியார், கன்னியாஸ்திரிகள், மாற்றுத்திறனாளி ஆகியோருக்கும் புதிய வரிமுறையில் பிடித்தம் செய்யப்படுகிறது.

சில மேல்நிலை பள்ளிகளில் துாய்மை பணியாளர்கள் உட்பட சம்பளம் அடிப்படையில் வருமான வரி விலக்கு பெற்றவர்களுக்கும் வரிப்பிடித்தம் செய்யப்படுவது அதிர்ச்சியாக உள்ளது. சம்பள 'போர்ட்டலில்' உள்ளீடு செய்யும் அலுவலர்களுக்கு சரியான பயிற்சி இல்லாததே இதற்கு காரணம். இதனால் மனஉளைச்சல் ஏற்படுகிறது என்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post