Title of the document

EMIS இருக்க பதிவேடுகளும் படிவங்களும் இன்னும் எதற்கு?


ஒரு விவசாயிக்குத் தம் அறுவடை நாள் அன்று ஒட்டுமொத்தமாக ஆயிரம் வேலைகள் இருப்பது போல ஒவ்வொரு பொதுத்தேர்வு அல்லாத ஆசிரியருக்கும் நிறைய பணிகள் இருக்கின்றன.

அதாவது, ஒன்று முதல் ஒன்பது வகுப்பு முடிய தேர்வு எழுதிய மாணவ, மாணவியரின் தேர்ச்சி அறிக்கை மற்றும் சுருக்கம் இரண்டு நகல்கள் சொந்த கைப்பட தயாரித்தல் வேண்டும். இதுதவிர, வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீகள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலும் இரண்டு நகல்கள் உருவாக்கப்படுதல் அவசியம்.

அதன்பின், இவை சார்ந்த பள்ளிப் பதிவேடுகளில் மேற்குறிப்பிட்ட அனைத்தையும் அந்தந்த வகுப்பாசிரியர்கள் சாப்பாட்டுப் பந்தியில் சாப்பிடுபவர் பக்கத்திலேயே கால்கடுக்க நிற்பது மாதிரி தமக்கான முறை வரும்வரை காத்திருந்து அவசர அவசரமாகத் தாமும் பிழையின்றி அவற்றையெல்லாம் பதிந்து தர வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பது அறியத்தக்கது.

இதுதவிர, நடப்புக் கல்வியாண்டிற்குரிய மாதவாரியான பள்ளி வேலை நாள்கள் விவரம், ஆசிரியர்கள் அனைத்து வகை விடுப்பு விவரங்கள், விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள் இருப்பு முகவரி, மாற்றுத்திறன் மாணவர்கள் பெயர் பட்டியல் ஆகியவை அந்தந்த மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் முன் சமர்ப்பிக்க ஏதுவாக எழுதப்பட வேண்டியது அவசியம்.

மேலும், பள்ளி அமைவிடத்திற்குரிய பகுதிகளில் வாழ்வோர் குறித்து ஏற்கனவே வேகாத வெயிலில் வீடுவீடாக மேற்கொண்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் கூடிய பள்ளி வயதுப் பிள்ளைகள் பற்றிய விவரங்களை குடியிருப்புப் பகுதி வாரியாக எழுதி முடித்திருக்க வேண்டும் என்பது விதி. அதிலிருந்து மக்கள்தொகை, 5 வயதிற்கு மேல் எழுதப் படிக்கத் தெரிந்தவர் மற்றும் தெரியாதவர், 0 - 4 வயதினர், 5 வயதிற்கு மேற்பட்டோர், 6 - 10 மற்றும் 11 - 14 வயதினரில் பள்ளி வயதுப் பிள்ளைகள், இப்பள்ளியில் படிப்பவர்கள், வேறு பள்ளியில் படிப்பவர்கள், பள்ளி இடை நின்றவர்கள், எங்கும் படிக்காதோர், மாற்றுத் திறனாளிகள் போன்ற விவரங்கள் சாதிவாரியாகத் தொகுக்கப்பட்டு அதன் சுருக்கப் பட்டியல் வழங்கப்பட வேண்டும்.

தவிர, வகுப்பு வாரியாகவும் பயிற்றுமொழி வாரியாகவும் எதிர்வரும் கல்வியாண்டிற்கு தேவையான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் ஆண், பெண் வாரியாக இலவச சீருடைகள் தேவைப்பட்டியல் அடங்கிய படிவம் தரப்படுதல் முக்கியம். அதுபோக, எதிர்வரும் புதிய கல்வியாண்டில் சேர்க்கப்பட இருக்கும் 5+ குழந்தைகளின் பெயர், பிறந்தநாள், பெற்றோர், முகவரி, ஆதார் எண், கைபேசி எண், மதம், சாதி, குடும்ப வருமானம் உள்ளடக்கிய விவரங்களைக் கொண்ட படிவமும் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

இவையனைத்தும் ஒவ்வொரு பள்ளியிலும் மிகுந்த பயபக்தியுடன் உருவாக்கப்படுவதுதான் சிறப்பு. ஒரு மடிப்போ, கிழிசலோ எதுவும் இருக்காது. அவ்வளவு முன்னெச்சரிக்கையுடன் அழகாகவும் நேர்த்தியாகவும் வெக்கையில் வியர்வை வழிய ஓய்வறியாமல் உற்பத்தி செய்த படிவங்கள் சம்பந்தப்பட்ட அலுவலரின் ஒப்புகைக்குப் பின் கிடக்கும் நிலையைப் பார்க்கவே எரிச்சலும் வேதனையும் வரும். இதற்காகவா இவ்வளவு பாடுபட்டோம் என்று!

காலத்திற்கு தக்க நவீனமயமாகி வரும் பள்ளிகல்வியில் இன்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஆளை அசத்தும் புதுப்புது செயலிகள்! கல்வி சார்ந்த அனைத்துவிதமான தகவல்களையும் தரவுகளையும் ஒருசில நிமிடங்களில் பள்ளி, ஒன்றிய, மாவட்ட வாரியாகத் தேடித் தொகுத்திடும் களஞ்சியமாக தமிழ்நாடு அரசு வடிவமைத்துள்ள எமிஸ் (Educational Management Information System) உள்ளது.

இதில் மாணவர், ஆசிரியர், பள்ளி, பதிவேடு, எண்ணும் எழுத்தும், அறிக்கை சார்ந்து எல்லாவித தகவல்களும் முறையாக ஆசிரியர்களால் அவ்வப்போது இராப்பகலாகப் பதியப்பட்ட துல்லியமான தகவல்கள் ஏராளம் காணக் கிடைக்கின்றன. வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் இதை நிர்வகிக்கும் ஒருசிலரால் உட்கார்ந்த இடத்தில் செய்து முடிக்கப்பட வேண்டிய வேலைகளை மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை வாட்டிவதைத்து எமிஸ் நடைமுறைக்கு முன் (Before Emis Era) கடைபிடித்து வந்த பதிவேடுகள் பராமரிப்பு மற்றும் படிவங்கள் தயாரிப்புப் பணிகளை எமிஸ் நடைமுறைக்குப் பின் (After Emis Era) சுமக்கச் சொல்வது என்பது மிகுந்த வேதனைக்குரியது.

பொதுவெளியில் எமிஸ்ஸுக்கு எதிரானவர்கள் ஆசிரியர்கள் என்கிற தவறான கருத்து ஒன்று இங்கு நீண்ட காலமாகவே நிலவி வருகிறது. அது உண்மையும் அல்ல. பதிவேடுகள் பராமரிப்பு என்கிற மரபுடன் குறையொன்றுமில்லை என்கிற ரீதியில் குடும்பம் நடத்தி வந்த ஆசிரியர் பெருமக்களை எமிஸ் என்கிற நவீனத்துடனும் சேர்ந்து வாழச் சொன்னதுதான் கொடுமை.

அதாவது, LED விளக்கில் பளிச்சென்று பளபளக்கும் வீட்டில் பழங்கால சிம்னி விளக்கொளியில் பழமை மாறாமல் படிக்கச் சொல்வதற்கு ஒப்பானதல்லவா இது? இஃதென்ன ஆசிரியர்களுக்கு அலுவலர்கள் ஆண்டுதோறும் கல்வியாண்டின் இறுதியில் அளிக்கும் ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும் வீட்டுப்பாடமா? இது யாருக்குத் தான் சலிப்பையும் எரிச்சலையும் தராது. சொல்லுங்கள்!

அதனால்தான், எமிஸ் மீது தீராத, தீவிர எதிர்ப்பு ஆசிரியர்களிடையே எழுகிறது. கல்வித்துறை இதுகுறித்து விரைந்து முடிவு எடுக்க வேண்டியது இன்றியமையாதது. எமிஸில் ஆண்டு இறுதித் தேர்வு மற்றும் முப்பருவத் தேர்வு சார்ந்த அனைத்து விவரங்களையும் பிழையில்லாமல் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்தால் மட்டும் போதுமானது என்று அவசர அவசிய சுற்றறிக்கை ஒன்று விரைந்து வந்தால் நல்லது.

இந்த இரட்டைக் குதிரை சவாரியில் இன்னும் எத்தனைக் காலம் ஆசிரியர் சமுதாயம் உழன்று கொண்டிருக்க வேண்டும்? அதில் ஒன்று மெல்ல ஓடும் மட்டக் குதிரை. மற்றொன்றோ வேகமாகப் பாயும் பந்தயக் குதிரை! இவற்றிற்கு நடுவில் கொஞ்சம் நிம்மதியைக் காணோம் என்று பரிதவித்து நிற்கும் ஆசிரியர் கூட்டம். ஒன்றையே திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப செய்யச் சொல்லும் வேலையிலிருந்து ஆசிரியர்களை விடுவியுங்கள். அல்லது எமிஸை விட்டு விடுங்கள்!

எழுத்தாளர் மணி கணேசன்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post