Title of the document

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் குறித்த SSTA மாநில அமைப்பு செய்தி வெளியீடு






2009-ல் திமுக ஆட்சி காலத்தில் முதன்முதலாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய ஊதிய முரண்பாடு ஏற்படுத்தப்பட்டது. அதனைக்களைய கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மிகக் கடுமையான போராட்டங்களை எங்களது SSTA இயக்கத்தின் சார்பாக நடத்தி வருகிறோம்.

2018- நாங்கள் DPI வளாகத்தில் கடுமையான காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்திய போது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் எங்களது கரம் பற்றி திமுக ஆட்சிக்கு வந்ததும் கண்டிப்பாக 2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடு களையப்படும் என்றார். அதன்படியே திமுக தேர்தல் அறிக்கை 311ல் இடம்பெற்றது. மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை எங்களுடைய ஒற்றைக் கோரிக்கை நிறைவேறவில்லை.

கடந்த 2022 டிசம்பர் மாதம் நாங்கள் மீண்டும் கடுமையான உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினோம். அப்போது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் 2009 க்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய மூன்று நபர் ஊதிய குழுவை அமைத்தார். அன்றைக்கே நாங்கள் இந்த குழுவை ஏற்க முடியாது,

இதுவரை நாங்கள் நான்கு குழுக்களை பார்த்து விட்டோம், உடனடியாக தீர்வை மட்டுமே எதிர்பார்க்கிறோம் எனக்கூறினோம். மேலும் 2009 ஆம் ஆண்டில் பணி நியமன ஆணையில் குறிப்பிட்டுள்ள ஊதியத்தை தராமல் 14 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகிறோம். தகுதித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட தகுதியான ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியமும் வழங்காமல் கடைநிலை ஊழியர்களின் ஊதியத்தை வழங்கி வருகிறார்கள்.

திமுக தேர்தல் அறிக்கையில் நிறைவேற்ற சாத்தியக்கூறு உள்ள கோரிக்கைகளை மட்டுமே உயர்மட்ட குழு அமைத்து தேர்தல் அறிக்கையில் தொகுத்து வெளியிட்டார்கள். இப்போதும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஒவ்வொரு பத்திரிக்கைகளிலும் ஒவ்வொரு கூட்டங்களிலும் நாங்கள் சொன்னதை செய்வோம்; செய்வதை தான் சொல்வோம், என்று கூறி வருகிறார்கள். ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் மூன்று ஆண்டுகளாக சொன்னதை செய்யவில்லை.

2023 ஜனவரி 1 ல் இந்த ஊதியக் குழு அமைக்கும் போதே மூன்றே மாதங்களில் உங்களுடைய ஊதிய முரண்பாடுகளை இந்த குழு பரிசீலித்து அறிக்கை அளிக்கும் என்றார்கள். 9 மாதங்கள் ஆகியும் எந்தவிதமான அறிக்கையும் வழங்காமல் அதற்கான முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் தான் மீண்டும் 2023 செப்டம்பர் கடைசியில் நாங்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்தோம். அப்போது மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கண்டிப்பாக இன்னும் மூன்றே மாதத்தில் குழுவின் அறிக்கையை பெற்று ஊதிய முரண்பாடு களையப்படும் என்றார். தற்போதுவரை குழு எவ்வித முன்னேற்றமின்றி அதே நிலையிலேயே தொடர்கிறது.

இதுநாள் வரை எங்கள் SSTA இயக்கம் நடத்திய அனைத்து போராட்டங்களும் மாணவர்களின் நலன் கருதி பருவத் தேர்வுகள் அனைத்தையும் முடித்துவிட்டு எங்களுடைய குடும்பத்தோடு இருக்க வேண்டிய அந்த தேர்வு விடுமுறை நாட்களிலேயே நாங்கள் சென்னை DPIÙ பட்டினி போராட்டத்தை நடத்தினோம். நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

கடைசியாக மூன்றே மாதத்தில் குழு அறிக்கை மாண்புமிகு முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்படும் என்று எங்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேச்சுவார்த்தையின் போது எங்களிடமும் ஊடக பேட்டியின் போதும் கூறினார்கள். ஒவ்வொரு முறையும் மூன்று மாதம், மூன்று மாதம் என்று இன்னும் எத்தனை மூன்று மாதங்களாக போகிறது என தெரியவில்லை. இப்போதும் 5 மாதங்கள் கடந்தும் எதுவும் நடைபெறவில்லை.

இதுபோன்ற சூழ்நிலையில்தான் பணி நாட்களில் நாங்கள் அறவழியிலான அஹிம்சை போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இப்போது மீண்டும் எங்களது பிரச்சனைக்கு தீர்வு சொல்லாமல் போராட்டத்தை கைவிடுங்கள் என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

எங்களிடம் இரண்டாவது பெற்றோர்களாகவே படிக்கும் மாணவர்களுக்கு நாங்கள் திகழ்கிறோம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஏனெனில் ஏழை மாணவ செல்வங்களுக்கு வேண்டிய சிறப்பான தரமான கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்கள் நாங்கள். எங்களிடம் படிக்கும் அனைத்து மாணவர்களும் வெகு சிறப்பாக கற்றறிந்து வருவதை எங்களுடைய மாணவச் செல்வங்களின் பெற்றோர்களே பல்வேறு இடங்களில் தெரிவித்துள்ளார்கள். போராட்டத்திற்கு ஆயத்தப்படுத்தும் போதே அடுத்த வாரத்திற்கான பாடங்களை நடத்தி முடித்துவிட்டு தான் போராட்டத்திற்கு வந்துள்ளோம், நிலை இதுபோன்று இருக்க மாணவ செல்வங்களின் கல்வி பாதிக்கிறது என்பதை சிந்திக்கும் அரசு, 14 ஆண்டுகளாக திமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்ட அந்த தவறை சரி செய்ய போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினரைக் கொண்டு கைது செய்து எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாமல் ஏதேனும் ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தை கூற முற்படுவது முற்றிலும் ஏற்புடையது அல்ல.

ஆசிரியர்கள் மீது பாசத்துடன் இருக்கும் எங்கள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் சொன்னதை நிறைவேற்றக் கோரி பத்து நாட்களாக போராடிவரும் ஆசிரியர்களை அழைத்து பேசக்கூட மனமில்லாமல் காவல்துறையினரைக் கொண்டு ஏதோ குற்றவாளிகளை போல நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் கண்டதும் கைது செய்து சித்திரவதைக்குள்ளாக்கி அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடங்களில் ஆடு, மாடுகளை போல் அடைத்து வருவது உள்ளபடியே மனம் மிகுந்த வேதனையளிக்கிறது.

உலகிற்கே சமூக நீதி என்றால் என்னவென்று எடுத்துரைக்கும் தமிழக அரசின் மாண்புமிகு முதல்வர் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் சமூக நீதி வழங்க மறுத்து மாற்றாந்தாய் மனப்பான்மையோடு இருப்பதை எங்களால் ஏற்க முடியவில்லை. தேசத்தின் முன்னேற்றத்திற்கு அடித்தளமான ஆசிரியர்கள் சமூக நீதி இல்லாமல் வஞ்சிக்கப்பட்டு வருகிறோம் என்பதே முற்றிலும் உண்மை.

எங்களுடைய இந்த நியாயமான சமூக நீதிக்கான போராட்டத்திற்கு மாணவ செல்வங்களின் பெற்றோர்களும், பொதுமக்களும், சகோதர ஆசிரியமைப்புகளும், ஏன் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுமே ஆதரவு தெரிவித்து உடனடியாக எங்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற அரசாணை அல்லது அரசாணை பிறப்பிக்கும் வரை இடைக்கால நிவாரணம் வழங்கும் பட்சத்தில் உடனடியாக பணிக்கு திரும்பி முன்பை விட மிகச் சிறப்பாக கூடுதல் நேரம் பணியாற்றி எங்களுடைய மாணவச் செல்வங்களின் கல்வி நிலையை மென்மேலும் உயர்த்துவோம்.

எங்களை அரசு வஞ்சித்தாலும் எந்த விதத்திலும் எங்களுடைய குழந்தைகளான மாணவச் செல்வங்களை நாங்கள் வஞ்சிக்கப் போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். விரைவில் தமிழக முதல்வர் அவர்கள் கொடுத்த இடைநிலை ஆசிரியர்களின் "சமவேலைக்கு" "சம ஊதிய" தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது என்ற ஒரு நல்ல செய்தியை அறிவிப்பை அறிவிப்பார் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்து காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டத்தில் காத்துக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்கள்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post