இடைநிலை ஆசிரியர்களுக்கு "சமவேலைக்கு" "சம ஊதியம்" அரசாணையை வழங்க வலியுறுத்தி மாண்புமிகு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் அறிக்கை !
இடைநிலை ஆசிரியர்களின் நீண்டநாள் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை நிறைவேற்றாத தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்
முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதங்கள் 01-6-2009 முதல் மாற்றியமைக்கப்பட்டபோது, 01-6-2009-க்கு முன்பு பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8,370 என்றும், 01-6-2009-க்கு பின் பணியமர்த்தப்பட்ட இடை நிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 5,500 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது. ஒரே பணி, ஒரே கல்வித் தகுதி என இருந்தும், இருவேறு ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 3,000 ரூபாய் என்றிருந்த மாத ஊதிய வித்தியாசம் தற்போது 25,000 ரூபாய் அளவுக்கு சென்றுவிட்டது. இந்த வித்தியாசத்தை சீர் செய்யக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த ஐந்து நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய வித்தியாசத்திற்கு மூல காரணம் தி.மு.க. தான். 2018 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது அதற்கு ஆதரவு தெரிவித்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இதற்கான உத்தரவாதம் தரப்பட்டு இருக்கிறது.
தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று 33 மாதங்கள் கடந்துள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, காலந்தாழ்த்தும் நடவடிக்கைகளில் தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது. போராடும் ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் தி.மு.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை, 2,000 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பெரும்பாலானோர் பெண்கள் என்றும் கூறப்படுகிறது. தி.மு.க. அரசின் ஆசிரியர் விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.நான்கு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் தி.மு.க. அரசு, இடைநிலை ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வெறும் 400 கோடி ரூபாயை செலவிட ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை. முந்தைய தி.மு.க. அரசினால் உருவாக்கப்பட்ட ஊதிய முரண்பாட்டினையே களையாத நிலையில், 99 விழுக்காடு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாகக் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம்.
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும், முந்தைய தி.மு.க. அரசால் ஏற்படுத்தப்பட்ட ஊதிய வித்தியாசத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், ஐந்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, ஊதிய முரண்பாட்டை களைவதற்கான அரசாணையை வருகின்ற மக்களவைத் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment