Title of the document

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு: பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியீடு


இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணை விவரம்:

தமிழகத்தில் கரோனா காலக்கட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையான மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய பள்ளிக்கல்வித் துறை சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது.

இதற்காக அப்போது ரூ.199 கோடியே 96 லட்சம் செலவிடப்பட்டது. அந்த திட்டத்தை திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் கண்காணிப்பதற்கும் மாநில, மாவட்டம், தொகுதி அளவில் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

தற்போது இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 2021 நவம்பரில் ரூ.50 கோடியும், 2022 மார்ச் மாதம் ரூ.114.17 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.173.31 கோடியும், 2023 மார்ச் மாதம் ரூ.52.85 கோடியும், செப்டம்பர் மாதம் ரூ.100 கோடியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில் 2024-25-ம் ஆண்டுக்கான இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கான மையங்கள் 1.8 லட்சத்தில் இருந்து 1.25 லட்சமாக குறைக்கப்பட உள்ளது. அந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்காக ரூ.191 கோடியே 90 லட்சம் ஒதுக்கப்பட வேண்டும் என்று இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அதிகாரி அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். அதை கவனமாக ஆராய்ந்து இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கி ஆணையிடப்படுகிறது.

மேலும், கற்றல் இழப்புகளை சரிசெய்ய கொண்டுவரப்பட்ட இல்லம் தேடி கல்வி திட்டத்தின் நோக்கம் வெற்றி அடைந்ததன் காரணமாக 2024-25-ல் இதற்கான மையங்கள் தேவைக்கேற்ப குறைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post