Title of the document

ஆசிரியர்களுக்குப் பணியில் மன அழுத்தத்தைத் தருகிறதா EMIS ?

பணியில் மன அழுத்தம் என்பது அண்மைக்காலமாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரவலாகக் கூறப்படுகிறது. தகவல் தொழில்நுட்பம் பெருவாரியாக மலிந்து விட்ட சூழலில் துறை சார்ந்த அனைத்துத் தகவல் தொடர்புகளும் உடனுக்குடன் பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உயர் அலுவலர்களும் அவற்றைச் சிரமேற்கொண்டு கட்டாயம் செய்து முடிக்க வேண்டிய நிலையில் ஆசிரியர் பெருமக்களும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.


இந்த மெனக்கெடலில் தமது தலையாய முதன்மைக் கடமையிலிருந்து ஒவ்வொரு நாளும் வழுவிச் செயல்படும் பணி சார்ந்த கொதிநிலையால் தான் தாம் விரும்பிய பணிச் சுமையாகவும் அச்சுமை மன அழுத்தமாகவும் உருமாறி உழலச் செய்கிறது. அதாவது மாணவர்கள் மத்தியில் கற்பித்தல நிகழ்வுகள் நிகழ்த்த முடியாமல் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் நித்தமும் இணையத்துடன் மல்லுக்கட்டும் மன உளைச்சல்கள் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றன.


மூளையிலுள்ள மயலின் உடைய கோடிக்கணக்கான நரம்பிழைச் செல்களே குழம்பித் தவிக்கும் அளவிற்கு எத்தனையெத்தனை நிர்வாகம் சார் செயலிகள்! இணைய வழி வேலைகள்! புள்ளி விவர அறிக்கைகள்! நலத்திட்டக் கேட்புப் படிவங்கள்! பயனர் மொழி மற்றும் கடவுச் சொற்கள்! எதற்கும் உரிய கால அவகாசம் கொடுக்கப்படாத எதேச்சாதிகார நிலை! போதிய புரிதலின்மை, இணையக் கோளாறு, தொழில்நுட்பம் பயன்படுத்துதலில் திறன் குறைபாடு முதலான காரணங்களால் சற்றுக் கால தாமதம் எடுத்துக் கொள்வோரைப் பொதுவெளியில் அலுவல் சார்ந்த புலனக் குழுவில் பதிவிட்டு அசிங்கப்படுத்துதல் மற்றும் செய்து முடிக்கக் கூறி அச்சுறுத்துதல் என தொடர் பணிச்சுமைகளில் அகப்பட்டு அல்லாடும் அவல நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் வேதனையுறுகின்றனர்.


21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அனைத்துத் துறைகளிலும் கணினி உள்ளிட்ட மின்னணுக் கருவிகள் மற்றும் இணையப் பயன்பாடுகள் வேறுவழியின்றி வலிந்து உட்புகுத்தப்பட்ட போது புதிய மாற்றங்களுக்கு உடனடியாகத் தம்மை தகவமைத்துக் கொள்பவர்கள் முதலில் ஆசிரியர் சமூகமாக இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் நடந்தது வேறு! பணியில் பழைமைவாதத்தையும் விடாப்பிடி வைராக்கியத்தையும் முரட்டுத்தனமான வீம்பையும் தொழில்நுட்பத்தை வேரோடு வெறுக்கும் இறுகிய மனப்பாங்கையும் உடும்புப்பிடியாக உறுதியுடன் பற்றிக் கொண்டிருக்கும் நெறிகட்டிப் போன சமூகமாக ஆசிரியர் சமூகம் தேங்கிக் காணப்படுவது என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகும்.


இந்த இரட்டை எதிர்வுகள் காரணமாக நிர்வாகத்தின் துரித விரைவு ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாத நிலை ஒரு புறமும் போதுமான கற்றல் அடைவுகளை வகுப்பறையில் உருவாக்க போதிய நேரமின்றித் தகிக்கும் வாடிய மாணவர்களைக் கொண்ட போதெல்லாம் வாடும் கொடிய நிலை மறுபுறமும் என அணுகுதல் அணுகுதல் மனப் போராட்டத்தில் ஆசிரியர்கள் மத்தியில் அனைத்திலிருந்தும் விட்டு விடுதலையாகும் போக்கு மிகுந்து காணப்படுகிறது. இது யாருக்கும் நல்லதல்ல. இதன் காரணமாக, விருப்ப ஓய்வும் தற்கொலை முடிவும் தற்போது தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. இது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவை ஆகும்.


மரபு வழிப்பட்ட பல்வேறு கோப்புகள், கடிதங்கள், படிவங்கள் மற்றும் பதிவேடுகள் தயாரித்தலும் பராமரித்தலும் அனுப்புதலும் இன்று வரை இருந்து வருகின்றன. அதேவேளையில், இவை சார்ந்த தகவல்கள் மற்றும் தரவுகள் ஆகியவற்றை இணைய வழியில் பதிவேற்றம் செய்து முடித்தலும் மனநிறைவு கொள்ளுதலும் அதிகப்படியான நேரமும் பொருளும் பொறுமையும் செலவழித்தலும் தொடர்கதையாகி இருந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஒரே சமயத்தில் இந்த இரட்டைக் குதிரை சவாரியில் தவிர்க்கவே முடியாத சூழலில் கட்டாயம் பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். கல்வியின் அடிப்படை அலகான கற்பித்தலும் கற்றலும் அநாதையாக இருப்பது குறித்து ஈண்டு இன்னும் பேசப்படவில்லை.


இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஒரு பள்ளியிலிருந்து பெற வேண்டிய தகவல்கள் அனைத்தையும் எமிஸ் என்றழைக்கப்படும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் மூலமாக எடுத்துக் கொள்வதை துறை சார்ந்த அலுவலகங்கள் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும். ஏனெனில், எமிஸ் என்றும் ஒழியாது. ஒழியவும் போவதில்லை. அதற்காகக் கூச்சல் போடுவது வீண்வேலை. தகவல் தொழில்நுட்பம் பெருகி விட்ட இச்சூழலில் நிர்வாக வசதிக்காக உருவாக்கப்பட்ட இதனைக் கைவிடச் சொல்வது என்பது நவீன மனிதனை மீண்டும் ஆதி மனிதனாக்கும் முயற்சியே ஆகும். நெம்புகோல் தத்துவம் எவ்வாறு ஒரு கடின வேலையை எளிதாக்குவது போல் தான் இதுவும்! ஆனால், இங்கு நிலைமை தலைகீழ்.


ஏற்கனவே, வழக்கு காரணங்களால் தலைமை ஆசிரியர் இல்லாத நிர்வாகம், ஆசிரியர் பற்றாக்குறை, வெற்று விளம்பரக் கவர்ச்சித் திட்டங்கள், சோதனைக்கூட எலிகளாகக் கருதப்படும் அப்பாவி ஏழை எளிய அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மீதான முறையான அறிவியல் பூர்வமான ஆய்வுகள் ஏதுமின்றி புதுப்புது கற்பித்தல் அணுகுமுறை சார்ந்த வன்முறைக் கட்டவிழ்ப்புகள், அதற்கு மனசாட்சிக்குப் புறம்பாக 'ஆகா பிரமாதம்' என்று கைதட்டி ஆரவாரம் செய்ய தோற்றுவிக்கப்பட்ட அடிமை வம்சமாக எள் என்றதும் எண்ணெயாக நிற்கும் ஊடக வெளிச்சத்தை உண்டு மகிழும் ஆசிரியர் பட்டாளம், நெறிபிறழ் மாணவர்கள் முன் கைகட்டி நிற்க வேண்டிய அவலம் என ஏராளமான பிரச்சினைகளைத் தோளில் சுமந்து கொண்டு எஞ்சிய கொஞ்ச நேரத்தில் பாடத்தைப் போதிக்கும் நிலைக்கும் மண்ணள்ளிப் போடுவதாக எமிஸ் இருந்து வருவது வேதனைக்குரிய ஒன்றாக நோக்கப்படுகிறது.


இத்தகைய நிலையில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணிக்குக் குந்தகம் விளைவிக்காமல் தேவையற்ற, திரும்பத் திரும்ப ஒரே வகையான புள்ளிவிவரங்கள் மற்றும் பதிவேடுகள் பராமரிப்பதிலிருந்து ஆசிரியர்களை முற்றிலும் விடுவிக்க தக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டியது அரசின் முழுமுதற் கடமையாகும். சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்காத கதையாக இங்குள்ள மாவட்ட, வட்டார கல்வி அலுவலகங்கள் ஆசிரியர்களை இதில் விடுவதாக இல்லை.  


காட்டாக, மாணவர்களின் முப்பருவத் தேர்வு மதிப்பெண்களை பருவம் மற்றும் காலாண்டு அடிப்படையில் எமிஸ் இணையதளத்தில் பதிவிட்ட பிறகு, பாட மற்றும் வகுப்பாசிரியர் மதிப்பெண் பதிவேடுகளில் பதிதல், அதன்பின் அவற்றை ஒருங்கிணைத்து பள்ளி ஒருங்கிணைந்த மதிப்பெண்கள் பதிவேட்டில் பதிவிடுதல், அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலகங்களில் மேற்கூறிய பதிவேடுகளுடன் தொன்றுதொட்டு வழக்கத்தில் உள்ள வகுப்பு வாரியான மதிப்பெண்களுடன் கூடிய தேர்ச்சிப் படிவங்கள் இரண்டு நகல்கள் உரிய அலுவலர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதில் காணப்படும் செய்கைகள் எவ்வளவு வேடிக்கையானவை என்பதும் மாற்றத்திற்கு உட்பட்டவை என்பதும் நன்கு புலனாகும். இஃது ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கைப் பதம் என்பது போலாகும். இதுமாதிரி நிறைய நிறைய சொல்லிக் கொண்டே போக முடியும்.


திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப என்று ஒரு திரைப்படத்தில் வரும் நகைச்சுவைக் காட்சிக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் ஒவ்வொரு தலைமையாசிரியரும் ஒவ்வொரு பாட அல்லது வகுப்பு ஆசிரியரும் பெரும் மன உளைச்சலுடன் இதற்காக இயங்கிக் கொண்டிருக்கும் நிலையைச் சற்று எண்ணிப் பார்க்கவும். அப்போதுதான் ஆசிரியர்கள் தரப்பில் காணப்படும் நியாயம் புரிய வரும். புதிய எமிஸ் தொழில்நுட்பத்திற்கு யாரும் எதிரிகள் அல்லர். அது பணியின் கடினத்தை வெகுவாகக் குறைக்க வேண்டுமே ஒழிய, அதுவே ஒரு கனத்த சுமையாக ஆசிரியருக்கு இருந்து விடக்கூடாது.


அதுபோல், தடியெடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்பதற்கிணங்க, முழுக்க முழுக்க வியாபார நோக்குடன் செயல்படும் ஆசிரியர்களுள் ஒரு பகுதியினர் பரப்புரை செய்யும் விதவிதமான படிவங்களையும் புதிய புதிய பதிவேடுகளையும் சந்தைப்படுத்தி அனைவரின் தலையிலும் கட்ட நினைப்பது என்பது பள்ளிக்கல்வித் துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய இன்றியமையாத நடவடிக்கை ஆகும். இஃது 'அவரால் செய்ய முடிகிறது; உன்னால் செய்ய முடியாதா?' என்று அதிகார சாட்டையால் ஒவ்வொருவரையும் ஓங்கிச் சொடுக்குகிறது என்பதே உண்மை. ஆசிரியர்களின் ஆகப்பெரும் மன உளைச்சலுக்கு இவை முக்கிய காரணங்களாக அமைகின்றன.


மாநில அளவில் இதுகுறித்து ஒரு விரிவான ஆலோசனைகளுக்கும் வழிகாட்டுதலுக்கும் பின், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயன்படுத்த வேண்டிய மிகமிக இன்றியமையாத படிவங்கள் மற்றும் பதிவேடுகள் ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு அச்சகங்கள் மூலம் அச்சடிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு பாடநூல்கள் விநியோகிப்பது போல் பள்ளிகள் தோறும் வழங்கப்பட வேண்டும். இதுதவிர, அவ்வப்போது தேவைப்படும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த படிவங்கள் மற்றும் பதிவேடுகள் மாதிரிகளை இணையவழியில் பகிர்ந்து 'ஒரே கல்வி; ஒரே படிவம்' என்னும் நிலையை உருவாக்கும் பொறுப்பு கல்வித்துறைக்கு அதிகம் உள்ளது. இவற்றை முடிந்தவரை எமிஸில் பதிவேற்றம் செய்யச் செய்து விட்டு விட்டால் போதுமானது. பள்ளிப்பார்வை ஆய்வு அலுவலர்கள் முன்னிலையில் அனைத்தையும் மீளவும் காட்சிப்படுத்த வேண்டியது அவசியமில்லை என்பதை வலியுறுத்த வேண்டும்.


பள்ளிக்கு ஆய்விற்கு வருகை புரியும் அலுவலர்கள் தலைமமையிடம் உருவாக்கித் தந்த தனிச்சிறப்பு மிக்க செயலியில் வகுப்பை உற்றுநோக்கல் நிகழ்த்துவதும் தலைமையாசிரியர் இருக்கையில் அனுமதியின்றி அமர்ந்து கொண்டு பழைய இரும்பு பீரோவில் வைத்துப் பராமரிக்கப்படும் தாள் மடித்து நெடியடிக்கும் பழம் பதிவேடுகள் ஒவ்வொன்றாகக் கால்கடுக்க பயந்து நடுங்கியபடி பணிநிறைவு பெறவிருக்கும் மற்றும் உடல் உபாதைகள் மறந்து மரத்துப்போய் நிற்கும் தலைமையாசிரியர் பெருமக்களிடம் கடுகடுத்துப் பேசுவதும் எத்தகைய முரண்பாடுகள் மிக்கதாக இருந்து வருவது என்பது அறியத்தக்கது. ஒவ்வொரு பள்ளியிலும் பார்வையாளர் இருக்கை அமைவதை அரசு உறுதிப்படுத்தல் நல்லது. தலைமையாசிரியர் இருக்கை தலைமையாசிரியருக்கே உரியதாகும்.


ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர் வருகைப்பதிவேடு, மாணவர் வருகைப்பதிவேடு, சேர்க்கை நீக்கல் பதிவேடு, மதிப்பெண் பட்டியல், ஊதியக் கேட்புப் பட்டியல், தணிக்கைப் பதிவேடு, பார்வையாளர் பதிவேடு மட்டும் பராமரித்தல் போதுமானது. மாதாந்திர அறிக்கை, நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட எஞ்சியவை அனைத்தும் எமிஸ் மூலமாகப் பதிந்து தேவைப்பட்டால் பதிவிறக்கிக் கொள்வதே நல்லது. இதனால் பள்ளித் தலைமையாசிரியர்கள் வகுப்பறைக்குச் சென்று தமக்காகத் தவம்கிடக்கும் மாணவ, மாணவிகளைப் புறம்தள்ளிவிட்டு, ஒன்றுக்கும் உதவாத உயிரற்ற பதிவேடுகளை நாள் முழுவதும் மட்டுமல்லாமல் வீடுகளிலும் கட்டிக் கொண்டு அழும் அவலப் போக்கும் பணியில் பேரிடராகத் திகழும் மன அழுத்தமும் அதனூடாக விளையும் விருப்பப் பணி ஓய்வு முடிவுகளும் தற்கொலை முயற்சி உள்ளிட்ட கோழைத்தனங்களும் வெகுவாகக் குறையும் என்பது திண்ணம். சம்பந்தப்பட்டவர்கள் இதுகுறித்துக் கூர்ந்து செவிமடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.



   எழுத்தாளர் மணி கணேசன்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post