Title of the document

எண்ணும் எழுத்தும் படுத்தும்பாடுகள் - பள்ளிக்குச் செல்லவே பயமாக இருக்கிறது...!



எண்ணும் எழுத்தும் வகுப்பறைகளில் என்னதான் நடக்கிறது என்பதைத் தமக்குத் தாமே கொதித்து அடங்கிப்போகும் குரலற்ற மனிதர்களின் விளிம்புநிலை முனகலை இரத்தமும் சதையுமாக அப்படியே இங்கு தந்திருக்கிறேன். நாடோறும் புழுங்கி வேகும் ஆசிரியர் சமூகம் எத்தனை தர்மசங்கடத்தில் உள்ளது என்பதை உணர்த்தவும் உணரவும் அதனூடாகக் குறைகளைதல் போதுமான அளவிற்கு நிகழவும் வேண்டும் என்கிற எண்ணத்தின் வெளிப்பாடன்றி வேறெதுவும் காரணங்கள் இல்லை என்பது ஈண்டு அறியத்தக்கது. இனி அந்த ஆற்றாமை நிறைந்த அவலக் குரல்களைக் கேட்போம்.

உண்மையைக் கூற வேண்டுமெனில் நான் நான்காம் அலகு முழுமையாக முடிக்கவில்லை. எனவே, Module 4 Exam Attend பண்ணவில்லை. மேலும் மாணவர்கள் ரோபோ மாதிரியானவர்கள் இல்லை. மிக வேகமாக கடக்க முடியவில்லை. பாடப்புத்தகம், பயிற்சி புத்தகம் அனைத்தும் எழுதுவதற்கு நேரமில்லை. பள்ளி திறந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. இன்னும் முதல்வகுப்பு கணக்குப் பயிற்சிப் புத்தகம் வரவில்லை. பத்து நிமிடம் கூட வீணாக்காமல் பணி செய்கிறேன். இருப்பினும் என்னால் பாடத்தை முடிக்க முடியவில்லை. ஆத்ம திருப்தி என்பது வரவில்லை.

ஆசிரியர்களை வேலை வாங்குவதாக நினைத்துக் கொண்டு மாணவர்களை நசுக்கிக் கொண்டிருக்கிறோமோ என்று தோன்றுகிறது. பாடப் புத்தகம், பயிற்சிப் புத்தகம், 2 வரி, 4 வரி நோட்டுகள், வீட்டுப்பாடம், Online Test எனக் கடைசியில் அனைத்துப் பாரங்களும் மாணவன் மீது சுமத்தப்படுகிறது என்று தான் தோன்றுகிறது.

ஆசிரியர்கள் மூச்சு முட்ட பணியாற்றுகிறோம் கற்பித்தல் நடைபெறுகிறதா? மாணவர்கள் நாள் பூராவும் வேலை செய்கிறார்கள். கற்றல் நடைபெறுகிறதா?

எந்த நேரமும் சதா யோசித்து யோசித்து செயலாற்றினாலும் Output இல்லை. முடியல. திணறி வருகிறேன்.

முதல் வகுப்பு மாணவர்கள் இன்னும் அழுகையை நிறுத்தவில்லை. ஒன்றுக்குப் பிறகு ஒன்பது என்கிறார்கள். இன்னும் Hand Eye Co-ordination வரவில்லை. ஆனால் நமக்கு வரும் Online Test மாணவர்களைப் பற்றி என்ன நினைக்கிறது என்றே புரியவில்லை.. ஆசிரியர்களின் தன்னம்பிக்கையைக் குறைத்து மன உளைச்சல் ஏற்படுத்தி அவர்களின் Productivityயை குறைப்பதற்காகவே இந்த Online Test ஏற்படுத்தப்பட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது.

ஆங்கிலம் அளவுக்கு மீறிய திணிப்பு. Communication English, Basic English இதில் அதிக கவனம் செலுத்தும்படி இருந்தாலே மாணவர்கள் கல்வி மேம்படும் அதிகப்படியான திணிப்புகள் சலிப்பையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது.

தற்போது எங்கள் பள்ளியில் பதவி உயர்வு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் தலைமையாசிரியர் போடவில்லை. ரொம்ப கிராமமான பகுதி மற்றும் வெகு தொலைவு காரணமாக இதற்கு முன் பதவி உயர்வு பெறுபவர்கள் மட்டுமே எங்கள் பள்ளியைத் தேர்வு செய்தார்கள். இப்போது வழக்கு இருப்பதால் பதவி உயர்வு போடவில்லை. நான் பொறுப்பு தலைமையாசிரியராகத் தற்போது செயல்பட்டு வருகிறேன். 5 ஆசியர்கள் பணியாற்ற வேண்டிய பள்ளியில் 4 ஆசிரியர்கள் அதுவும் தலைமை இல்லாமல் ஆங்கில வழிக்கல்வி.

5th Std Baseline Survey இன் போது 36 மாணவர்களை மதிப்பீடு Online வழியாக செய்யும்போது மிகவும் சிரமப்பட்டேன். ஒரு மாணவர் வாசித்து தேர்வு எழுத 10 அல்லது 20 நிமிடங்கள் ஆகின்றன. ஒவ்வொரு மாணவனாக மதிப்பீடு செய்ய ஒரு பாடத்திற்கு ஒரு நாள் செலவாகிறது. சர்வர் சிலசமயங்களில் வேலை செய்யவில்லை. ஆக மூன்று பாடங்களுக்கு மூன்று நாள். பாடம் நடத்தவா? தேர்வு செய்ய வைப்பதா? இன்னும் 5 பாடங்களுக்கு வரும் போது என்ன செய்ய?

இப்போதெல்லாம் அனைத்தும் Data மயம். நாம் செயலில் எல்லா தரவுகளும் தந்தே ஆக வேண்டும். இல்லையெனில் உடனடியாக செய்யாத பள்ளிகள் List உடனே வந்து விடும். வருகைப் பதிவு, PSTM , LIBRARY, HEALTH SCREEN, SCHEMES, SMC, .... இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது முன்னாள் மாணவர் மன்றம்!

அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கற்பித்தல் முறை அதுவும் ஒரே காலகட்டத்தில் நடந்தே ஆக வேண்டும். அனைவரும் இன்று இந்த பாடம் இந்த முறையில் இப்படித்தான் நடத்த வேண்டும் என்றால் எப்படி? ஒவ்வொரு ஆசிரியருக்கும் வகுப்பறை சுதந்திரம் வேண்டும். அவருக்குத் தான் அவருடைய மாணவர்களுக்கு எப்படிக் கொடுக்க வேண்டும் என்பது தெரியும். எனது வகுப்பு மாணவர்களுக்குப் பயன்பட்ட உத்தி ஒரு சில பள்ளிக்குப் பொருந்தலாம். அனைவருக்குமே பொருந்தும் என்று எப்படிக் கூற முடியும்? இன்று அப்படித்தான் உள்ளது.

ஆண்டுத் தேர்வு பருவத்தேர்வானது. தற்போது பருவத்தேர்வு பார்த்துக் கூறும் தேர்வாகி விட்டது. இவர்கள் எப்படி நாளைப் போட்டித்தேர்வை எதிர் கொள்வார்கள்? நாம் படிக்கும் போது எவ்வளவு மனனம் செய்தோம். அந்தளவுக்கு இப்போது இல்லை.

இன்று நான் எதையும் தொடங்கவில்லை. யார் முதல் வகுப்பிற்கு கேள்விகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. தலைமையாசிரியரிடம் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தேன்... அதில் ஒன்றிரண்டைத் தவிர எந்த வினாக்களுக்கும் குழந்தைகளால் விடையளிக்க முடியாது. எழுத்துக்களே தெரியாதவனுக்கு ஆங்கிலத்தில் வார்த்தைகளை வாசிக்கச் சொல்லியிருக்கிறார்கள். சென்ற வாரம் முழுவதும் வேலைப் பளுவினால் இந்த மதிப்பீட்டைக் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டேன். BEO, BRTE இவர்களிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது. முடித்துவிட்டுத் தகவல் சொல்லுங்கனு. நேற்று மொத்தமாக முடித்து Heart Attact வராத குறைதான்.

இன்னும் அந்த தமிழ் வழி Work Book ல பாருங்க 6 எழுத்தில் வரும் வார்த்தைகளை வட்டமிடுக என்று இருக்கும். ஆங்கில வழியில் ஓகே தமிழ் வழியில் வரும் போது எப்படி அந்த துணைக்கால், இரட்டைக் கொம்பு போன்றவற்றைக் கணக்கிடுவார்கள். பிள்ளைகள் இப்போதுதான் எழுத்துகளைக் கற்றுக் கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். Work Book முதல் வகுப்பிற்கு தயாரித்தவர்கள் என்ன நினைத்து தயாரித்தார்கள் என்று தெரியவில்லை.

இதனுடைய தாக்கம் சென்ற ஆண்டு எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை.. பத்து ஆண்டுகளாக மூன்றாம் வகுப்பையும் நான்காம் வகுப்பையும் தான் பார்த்துக்கொண்டிருந்தேன். சென்ற ஆண்டும் அப்படியே. எங்கள் பள்ளியில் மொத்தம் மூன்று ஆசிரியர்கள். தலைமையாசிரியரும் இன்னொரு ஆசிரியரும் VRS இந்த ஆண்டின் இறுதியில் கொடுக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். எவ்வளவோ கேட்டுப் பார்த்தும் அவர்கள் முடிவில் திடமாக இருக்கிறார்கள். பணி செய்யும் ஓராண்டு மன உளைச்சல் இல்லாமல் இருக்கட்டும் என்று அவர்களை ஆளுக்கொரு வகுப்பைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு நான் முதல் மூன்று வகுப்புகளை இந்த ஆண்டு பார்த்துக் கொள்கிறேன். எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது ஒவ்வொரு நாளும் எப்போது நான்கு மணியாகும் என்றிருக்கிறது. பள்ளிக்குச் செல்லவே பயமாக இருக்கிறது...

நன்றி

- எழுத்தாளர் மணி கணேசன்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post