Title of the document

அரசு மவுனம் கலையுமா? காத்திருக்கும் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள்!!






கோரிக்கைகள் தொடர்பாக, தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் மவுனம் காத்து வருவது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதுள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படி வழங்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோருக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த மாதம் 11ம் தேதி, கோட்டையில் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பு அறிவித்தது.

அதைத் தொடர்ந்து, அமைச்சர்கள் வேலு, தங்கம் தென்னரசு, மகேஷ் ஆகியோர், ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசினர்.

அவர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று, போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.

அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளதால், தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தரும்; அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்ற நம்பிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காத்திருந்தனர்.

ஆனால், பேச்சு நடத்தி ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், இதுவரை அரசு தரப்பில் இருந்து, சாதகமாக எந்த பதிலும் வரவில்லை. அரசு முடிவெடுக்காமல் மவுனம் காத்து வருவது, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


இம்மாதம் இறுதிக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, அடுத்த மாதம் கூடி முடிவு செய்ய திட்டமிட்டுள்ளதாக, ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post