தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ₹1000 கிடைக்குமா? - NMMS தேர்வு பற்றி விரிவான விளக்கம்
நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப்' (NMMS) மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் இதற்கான தேர்வை எழுதித் தேர்வானால், 9-ம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும்.
இந்தத் தேர்வில் மாணவர்கள் குறைந்தபட்சம் 55% மதிப்பெண் பெறுவதுடன் 8-ம் வகுப்பு தேர்ச்சிபெறுவதும் முக்கியம். எஸ்சி/எஸ்டி மாணவர்கள் இந்தத் தேர்வில் 50% மதிப்பெண்களுடன் 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற வேண்டும். அப்போதுதான் 9-ம் வகுப்பு படிக்கும்போது இந்த NMMS உதவித்தொகை கிடைக்கும்.
அடுத்து 10-ம் வகுப்பு படிக்கையிலும் இந்த உதவித்தொகை தேவையென்றால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் 9-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடனும், எஸ்சி/எஸ்டி மாணவர்கள் 50% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற வேண்டும்.
11-ம் வகுப்பு படிக்கையிலும் NMMS உதவித்தொகையைப் பெற வேண்டுமென்றால், 10-ம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி மாணவர்கள் என்றால் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
12-ம் வகுப்பிலும் இந்த உதவித்தொகை தொடர வேண்டுமென்றால், 11-ம் வகுப்பை எஸ்சி/எஸ்டி மாணவர்கள் என்றால் 50% மதிப்பெண்களுடனும், மற்ற மாணவர்கள் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கிற 8-ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே NMMS உதவித்தொகைக்கான தேர்வை எழுத முடியும். (நவோதயா வித்யாலயா, கேந்திரிய வித்யாலயா, சைனிக் மற்றும் மாநில அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் உறைவிட/குடியிருப்பு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் இந்தத் தேர்வை எழுத முடியாது) மாணவர்களின் குடும்ப வருமானம் வருடத்துக்கு ஒன்றரை லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை பெறுவதற்கு சம்பந்தப்பட்ட மாணவர், அவருடைய பெற்றோர் என மூவரிடமும் `பான் கார்டு' இருக்க வேண்டும். இதுபற்றி பெற்றோர்களுக்கே விழிப்புணர்வு இல்லை. அப்பா, பிள்ளை அல்லது சிங்கிள் பேரன்ட் என்றால் அம்மா, பிள்ளை என ஜாயின்ட் அக்கவுன்ட் இருக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதற்கும் கல்விக்கடன் வாங்குவதற்கும் பான் கார்டும் ஜாயின்ட் அக்கவுன்ட்டும், கூடவே ஆதார் கார்டு, இருப்பிடச் சான்றிதழ் ஆகியவையும் அவசியம்.
NMMS தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தை scholarships.gov.in-லிருந்து பதிவிறக்கம் செய்து, ஸ்கேன் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். NMMS தேர்வுகள் மாநில அளவில் ஆஃப்லைன் முறையில் நடத்தப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 26, 2021.
NMMS தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. ஒவ்வொரு தாளுக்கான தேர்வும் 90 நிமிடங்கள் நடைபெறும். மதிப்பெண்களும் 90 தான். முதல் தாளில் ஜெனரல் நாலெட்ஜ் தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இரண்டாவது தாளில் 8-ம் வகுப்புக்கான அறிவியல், சமூக அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை முழுமையாகப் படித்தாலே போதும். தவிர, NMMS தேர்வின் முந்தைய ஆண்டுகளின் மாதிரி கேள்வித் தாள்களுக்கான பதில்களையும் தெரிந்துகொள்ளலாம். தேர்வு முடிவுகளை மாநில தேர்வு அதிகாரிகள் ஆன்லைன் முறையில் மற்றும் ஆஃப்லைன் முறையில் வெளியிடுவார்கள்.
NMMS உதவித்தொகையைப் பற்றி நான் சந்தித்த 90 சதவிகித மாணவர்களுக்குத் தெரியவே இல்லை. தவிர, இதைப் பெறுவதற்கான செயல்முறைகள் கடினமாக இருப்பதால், சாமானிய பெற்றோர்களால் இதைப் பின்தொடர்ந்து பிள்ளைகளுக்குப் பெற்றுத்தரவும் இயலவில்லை. ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு NMMS உதவித்தொகை கிடைக்க வேண்டுமென்றால், ஒவ்வொரு கலெக்டர் அலுவலகத்திலும் இதற்கென பிரிவை ஆரம்பித்து, மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். சேலம் கலெக்டர் எஸ். கார்மேகம் வங்கிக்கடன் வாங்க வரும் மாணவர்களுக்கு, `பான் கார்டு வாங்கித் தருவதற்கான உதவியைச் செய்யும் ஒரு பிரிவை தன்னுடைய அலுவலகத்தில் ஆரம்பித்திருக்கிறார்.
இதைப் போலவே NMMS உதவித்தொகையை எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பெறுவதற்கான அத்தனை உதவிகளையும் செய்வதற்கு ஒவ்வொரு கலெக்டர் அலுவலகத்திலும் தனிப் பிரிவு இயங்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் மாணவர்களுக்கு இந்த உதவித்தொகையைப் பெறுவதற்குத் தொடர்ந்து உதவி செய்ய வேண்டும். தவிர, சமூக ஆர்வலர்களும் உதவ வேண்டும். இந்த உதவித்தொகை கிடைத்தால், எத்தனையோ குழந்தைகள் வறுமையால் கல்வியைக் கைவிட மாட்டார்கள்''
- கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
Post a Comment