பள்ளி ஆசிரியை இடமாறுதல்; கதறியழுத பள்ளிக் குழந்தைகள் !
விராலிமலை அருகே பள்ளி ஆசிரியை ஒருவர் பணி உயர்வு பெற்று மற்றோரு பள்ளிக்கு மாறுதல் பெற்றுச் செல்வதை தாங்கி கொள்ள முடியாத மாணவ – மாணவியர்கள், பெற்றோர்கள் அவரை கட்டியணைத்து அழுத சம்பவம் காண்போரையும் கண்கலங்க வைத்தது.
ஆசிரியை ஜெனிட்டா
பள்ளி பருவகாலம் எப்போதுமே நமது மனதில் இருந்து விலகாமல் நீங்கா இடத்தை பிடித்தாக இருக்கும். சக மாணவர்கள், நண்பர்கள் தொடங்கி பாடம் எடுத்த ஆசிரியர்கள் வரை யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட மாட்டோம். அப்படியாக நம் அனைவரையும் மீண்டும் பள்ளி பருவத்திற்கு அழைத்து செல்லும் நிகழ்வாக சமீபத்தில் ஒரு உண்மை சம்பவம் விராலிமலை அருகே உள்ள மலைக்குடிப்பட்டி அரசு தொடக்கபள்ளியில் அரங்கேறியது
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள மலைக்குடிப்பட்டி அரசு தொடக்கபள்ளியில் கடந்த 11 வருடமாக பணியாற்றிவரும் மாற்றுத்திறனாளி ஆசிரியை ஜெனிட்டா என்பவர் தற்போது 4-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இவர் 4 ஆம் வகுப்பு மாணவர்களிடம் மட்டுமல்லாது பள்ளியில் கல்விபயிலும் 220 மாணவ, மாணவிகளிடமும் ஆசிரியர் போல் நடந்துக் கொள்ளாமல் நண்பனாகவும், தாயாகவும், சகோதரியாகவும், சக மனிதனாகவும் நடந்து வந்துள்ளார்.
மேலும் அங்கு பணியாற்றி வரும் சக ஆசிரியர்களிடம் நட்பு பாராட்டி வருவதால் மாணவர்கள் மட்டுமல்லாது சக ஆசிரியர், ஆசிரியைகளிடம் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார். இவர் மாணவர்களுக்கு பாடம் சொல்லி தருவதில் தொடங்கி விளையாட்டு தோழமை, ஆசான் என்பதோடு சேர்ந்து அவர்களின் தனித்திறனை கண்டறிந்து அத்திறனை வளர்க்கும் விதமாக அவர்களை ஊக்கப்படுத்தி வந்துள்ளார்.
அங்கிருந்த மாணவர்கள் குடும்பத்தில் ஒருவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று ஆசிரியை ஜெனிட்டா பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலத்தூர் அரசு நடுநிலைப் பள்ளிக்கு செல்கிறார். இந்த நிலையில் ஆசிரியை ஜெனிட்டாவிற்கு பிரிவு உபச்சார விழா பள்ளியில் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் மட்டுமல்லாது பெற்றோர்கள், சக ஆசிரியர்கள் கண்ணீர் மல்க கட்டியணைத்து அவருக்கு பிரியாவிடை கொடுத்தது காண்போரை கண்கலங்க வைத்தது.
ஆசிரியர் என்றால் கல்வி மட்டுமே கற்றுக் கொடுப்பவர் கண்டிப்புடன் மாணவர்களிடத்தில் நடந்து கொள்பவர் என்ற நிலையில் இருப்பதை மாற்றி மாணவர்களிடம், பெற்றோர்களிடம், சக ஆசிரியர்களிடம் சகோதரத்துவத்தை பாராட்டி இவர் நடந்து கொண்ட விதத்தை எடுத்து காட்டுவதாகவே பிரிவு உபச்சார விழாவில் நடைபெற்ற சம்பவம் அமைந்தது.
Hand's up to the Teacher
ReplyDeleteCongratulations to dedicated teacher.Mrs. Jenitta.
ReplyDeletePost a Comment