Title of the document

அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 71 லட்சமாக அதிகரிப்பு: அமைச்சர் பேட்டி 




அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 71 லட்சத்தை கடந்துள்ளதாக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி திமுக தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்புவோருக்கு விருப்ப மனுவை திருச்சி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான மகேஷ் பொய்யாமொழி நேற்று வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

66லட்சமாக இருந்த அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை, தற்போது 71 லட்சத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதில் எந்தெந்த அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு அதிகம் தேவைப்படுகிறதோ, அதை செய்து கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார்களை மாணவிகளும், பெற்றோர்களும் தெரிவிக்கும் முறையை எளிதாக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு பள்ளியின் புகார் பலகையிலும் 14417, 1098 புகார் எண் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல் அருகில் உள்ள காவல் நிலையத்தின் போன் எண்ணையும் பதிவிட வேண்டும் என தெரிவித்து இருக்கிறோம்.

இதில் வெறும் புகார் எண் மட்டும் கொடுத்தால் போதாது. உளவியல் ரீதியான கவுன்சலிங் தேவைப்படுகிறது. அனைத்து இடத்திலும், இதற்கென உளவியல் ஆலோசனை வழங்க ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு சுழற்சி முறையில் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 14417 என்ற புகார் மையம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து நாளை (இன்று) சென்னையில் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளேன்.பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் யாராக இருந்தாலும் தயங்காமல் புகார் தெரிவிக்கலாம். தனியார் பள்ளிகளில் மாணவர்களை முழு கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது. அவ்வாறு வற்புறுத்தினால் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post