ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் கைது
பழைய ஓய்வூதிய திட்டத்தை வலியுறுத்தி, 72 மணி நேர உண்ணாவிரத போராட்டத்தை துவக்கிய, 'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினரை, போலீசார் கைது செய்தனர்; போராட்ட பந்தலையும் அகற்றினர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்கும், 72 மணி நேர தொடர் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.சென்னை எழிலகத்தில் உள்ள, அரசு அலுவலகங்களின் வளாகத்தில், பந்தல் அமைத்து, நேற்று காலை போராட்டம் துவங்கியது. ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.ஓ.சுரேஷ், குமார், தாஸ், தியாகராஜன் உள்பட, 15 பேர் மட்டும், உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.இந்நிலையில், போராட்ட இடத்துக்கு வந்த போலீசார், அதிரடியாக பந்தலை பிரித்தனர்.
அதையும் மீறி போராட்டம் நடத்த முயன்ற ஒருங்கிணைப்பாளர்களை கைது செய்தனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இந்த தகவலை அறிந்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், தங்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில், நேற்று மாலை ஆர்பாட்டம் நடத்தினர்.போராட்டம் குறித்து, ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறியதாவது:பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைத்து அரசு ஊழியர்களுக்கும் அமல்படுத்துவது, 21 மாத அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்குவது, ஊதிய முரண்பாடுகளை நீக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அமைதியான முறையில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்தோம்.
யாருக்கும் தொந்தரவு இல்லாத வகையில், எழிலக வளாகத்தில் உண்ணாவிரதத்தை துவங்கினோம். ஆனால், போலீசார் எங்களை தடுத்து கைது செய்து உள்ளனர். அடுத்த கட்ட போராட்டம் குறித்து, விரைவில் முடிவு செய்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்
Post a Comment