TNPSC - தேர்வு ஆணையத்தின் கனிவான கவனத்துக்கு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், குரூப் 1 பணி யிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வைத் திறம்பட நடத்தி இருக்கிறது. நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக இருந்தன. பாராட்டுகள்.
வினாக்கள் எளிமையாகவே இருந்தன. ஆனால்.. ஒரே கேள்வி / பதிலை ஒட்டியே இரண்டுக்கு மேற்பட்ட வினாக்கள் அமைந்தன; வினாக்களைத் தேர்வு செய்வதில் ஏன் இத்தனை வறட்சி என்று தெரிய வில்லை.
கணிதப் பகுதியில் பல கேள்விகள் மிகச் சாதாரணம். ‘குரூப் 1’ தேர்வர்களுக்கானது அல்ல. குரூப் 4 தேர்வில் இருந்து ’இறக்குமதி’ செய்யப்பட்டவை போல் தோன்று கின்றன.
சில வினாக்களுக்கு பார்த்த மாத்திரத்தில் தெரிகிறார் போன்று, தெரிவுகள் தரப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, வடக்கு தெற்கு வரிசையில் ஆறுகளை வரிசைப்படுத்துதல். மகாநதி, கோதாவரி கிருஷ்ணா, காவேரி என்று 4 ஆறுகள். இவற்றில் காவிரி மட்டும் தமிழ்நாட்டை சேர்ந்தது. மற்ற மூன்றும் நமக்கு வடக்கே உள்ளன. தெரிவுகளில் நான்காவதாக காவிரி உள்ள விடை ஒன்றுதான் இருக்கிறது! இதே போன்று, சுற்றுலா தலங்களைப் பொருத்துதலில், ஒகேனக்கல் – தமிழ்நாடு என்கிற தெரிவு ஒன்று மட்டுமே உள்ளது.
நீல் சிலை சத்யாகிரகம், உப்புசத்யாகிரகம் தொடர்பாக இரண்டு வினாக்கள். இரண்டிலுமே, அம்மையார்K.B. சுந்தராம்பாள் என்பதற்கு பதிலாக K.P. என்று தவறுதலாகத் தரப் பட்டுள்ளது.
‘நுகர்வு சார்பை தூண்டுகின்ற அகவய ஆவன காரணிகளாவன’ என்று தமிழாக்கத்தில் போட்டுத் தாக்கும் ஆணையம், ஏற்கெனவே பயன்பாட்டில் இருக்கும் பல சொற்களை மாற்றியுள்ளது. ‘நிர்வாக அதிகாரம்’ என்பதை செயலாட்சி அதிகாரம் என்கிறது; ‘அதிகார வரம்பு’ (jurisdiction) - அதிகாரம் (powers) என்று தவறாகத் தரப்பட்டுள்ளது. ‘மாசு’- தெரியும்; ‘மாசுப்பாடு’- ஏன்?
அரசமைப்பு சட்டம் (அ) அரசியல் சாசனம் என்றுதான் சொல்லி வருகிறோம். ஆனால் ஆணையத்தின் கேள்வித்தாள், மீண்டும் மீண்டும் ‘அரசியல் அமைப்பு’ என்றே குறிப்பிடுகிறது! சட்டம் (அ) சாசனம் - ஒருமுறை கூட இல்லை. நீதிமன்றம் என்பதை, ‘வழக்காடு மன்றம்’ என்று சொல்வீர்களா..? ‘உயர் வழக்காடு மன்றம்’, ‘உச்ச வழக்காடு மன்றம்’… என்று யாரேனும் எழுதித் தந்தால் அப்படியே ஏற்று விடுவீர்களா..?
அரசமைப்பு சட்டத்தின் பெயர் மீண்டும் மீண்டும் பலமுறை தவறுதலாகத் தரப்பட்டுள்ளது. இது ஒருவேளை மாண்பமை நீதிமன்றத்தின் முன்பாக வருமானால், தேர்வாணையம் சங்கடத்துக்கு உள்ளாக நேரிடலாம். சாசனத்தின் ‘முகப்புரை’, வினாத்தாளில் ‘முன்னுரை’ ஆகி விட்டது. இதேபோல, ‘திருத்தம்’ (amendment) என்பதை ‘திருத்தல்’ என்கிறது. எப்போது யாரால் இவ்வாறு மாற்றப்பட்டது?
விக்கான கணக்கெடுப்பு 2019-ன்படி எந்த மாநிலம் அதிக பிஎச்.டி(முனைவர்களை) உருவாக்கி உள்ளது..? என்று ஒரு கேள்வி. 310 பக்கங்கள் கொண்ட ‘சர்வே’ அறிக்கையின் தொடக்கத்தில், முக்கியமானதாக 38 அம்சங்கள் பட்டியல் இடப்பட்டுள்ளன. இதில் எந்த ஒன்றைப் பற்றியும் கேட்கவில்லை. அறிக்கையின் உள்ளே ஏராளமான அட்டவணைகள் உள்ளன. அதில் ஒன்று மாநிலவாரியாக பிஎச்டி.யில் ‘சேர்ந்தவர்கள்’ பற்றியது. அறிக்கையின் முக்கிய அம்சங்களை விட்டுவிட்டு ‘எங்கிருந்தோ’ ஒன்று எப்படி கேள்வியாக வந்தது..? ‘செய்தி’யை மட்டும் அல்லாமல், அறிக்கையையும் ஒரு முறை பார்த்து இருக்கலாம்!
மொத்த வினாத்தாளிலும், சர்வதேச நிகழ்வுகள் குறித்து ஒரே ஒரு கேள்விதான், அதுவும் தவறாக. ‘2020-ல் உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக வங்கி இணைந்து சாலைப் பாதுகாப்பு பற்றிய 3-வது சர்வதேசக் கருத்தரங்கு நடைபெற்ற இடம் எது?’
இந்த மாநாடு, உலக வங்கியுடன் இணைந்து நடந்ததாகத் தெரியவில்லை. ஐ.நா. பொதுச்சபையின் வேண்டுகோள் படி, சுவீடன் அரசும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து நடத்தியது. இதிலே உலக வங்கி எங்கிருந்து வந்தது..?
நாடாளுமன்ற அமைச்சரவை’ நீடிப்பது இவரது ‘ஆளுமையால்’ என்கிறது ஆணையம். மத்திய அமைச்சரவை தெரியும். அது என்ன ‘நாடாளுமன்ற அமைச்சரவை’? ‘இவரது ஆளுமையால்’ – இது என்ன மொழிபெயர்ப்பு..?
‘வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்..’ என்கிற திருக்குறள் போலி ஒழுக்கத்தைக் கண்டிக்கிறது. ஆனால் வினாத்தாள், திருக்குறள் இந்தப் பண்பை ‘வலியுறுத்துகிறது’ எனச் சொல்கிறது. ஆங்கிலத்திலும் இதே பொருளில்தான் தரப்பட்டு இருக்கிறது. திருக்குறளுக்குச் செய்த அநீதியை எப்படி சரிசெய்ய போகிறார்கள்.? திருக்குறளின் சரியான பொருள் உணர்ந்த, வினாவை சரியாகப் புரிந்து கொண்ட தேர்வர்கள், நான்கு விடைகளுமே தவறு என்றுதான் கொள்ள வேண்டும். ஆணையம் என்ன சொல்லப் போகிறது..? தமிழில் ஒற்று வரும், வரா இடங்களைப் பற்றி ஆணையம் சற்றும் கவலைப்படவில்லை.
ஆனால், ஆணையத்தின் தலைவர் கூறியதாக ஒரு காணொலி காட்சி வந்தது. தவறான கேள்விகளுக்கு ‘விடை தெரியவில்லை’ என்கிற தெரிவு ஏற்றுக் கொள்ளப்படுமாம்!
‘இது எப்படி சரியாகும்..?’ மன்னிக்கவும் – விடை தெரியவில்லை.
- இந்து தமிழ் நாளிதழ் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment