Tamil Nadu Schools Reopen soon / விரைவில் பள்ளிகள் திறப்பு?- அரசுப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மும்முரம்.Schools to open soon? - Cleaning work in government schools is in full swing.
தமிழகத்தில் விரைவில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்ற சூழலில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாகக் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அதற்கு மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில், பள்ளிகளைத் திறந்து வகுப்புகளை நடத்தலாமா என்று அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
கடந்த நவ.16-ம் தேதி பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு திட்டமிட்ட நிலையில், நவ.14-ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்குப் பின்னர் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தால், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் எழுந்த கடும் எதிர்ப்புக் காரணமாக அந்த முடிவு கைவிடப்பட்டது. பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலோசிக்கலாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி பொங்கல் விடுமுறைக்குப் பின்னர், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்தலாமா? என்று பெற்றோர்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்கலாம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறக்க அரசு திட்டமிட்டு வருகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை எம்ஜிஆர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாநகராட்சி மற்றும் பள்ளி தூய்மைப் பணியாளர்கள் இன்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். வகுப்பறைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டதுடன் குப்பைகள் அகற்றப்பட்டன. தனிமனித இடைவெளியோடு இருக்கைகள் அமைக்கப்பட்டன. கழிப்பறைகளும் சுத்தம் செய்யப்பட்டன. இதேபோல சென்னை, அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் சுகாதாரப் பணிகள் நடைபெற்றன.
Post a Comment