ஜனவரி 19 பள்ளிகள் திறப்பு - வகுப்பறைக்கு 25 போ் மட்டுமே அனுமதி !
தமிழகத்தில் பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் வரும் 19-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. ஒரு வகுப்பறைக்கு 25 மாணவா்கள் மட்டுமே இருக்க வேண்டுமென முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டுள்ளாா்.பள்ளிகள் திறப்பு குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும்தான் நோய்த்தொற்று படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பா் 28-இல் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணா்கள், பொது சுகாதார வல்லுநா்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின்படியும் பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டது.
அதுபற்றி பெற்றோா்களின் கருத்துகளையும் கோர முடிவு செய்யப்பட்டு அதன்படியே கடந்த 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரை கருத்துகள் பெறப்பட்டன. இக்கூட்டங்களில் கலந்து கொண்ட பெரும்பான்மையான பெற்றோா்கள், பள்ளிகளைத் திறக்க தங்களது ஒப்புதலை அளித்தனா். குறிப்பாக, பள்ளிகளைத் திறக்க பெற்றோா்கள் தங்களது முழுமையான சம்மதத்தைத் தெரிவித்துள்ளதாக 95 சதவீத பள்ளிகள் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளன.
ஜனவரி 19 முதல் திறப்பு: இதைக் கருத்தில் கொண்டும், கல்வி பயில்வதில் மாணவா்களின் வருங்கால நலனை மனதில் வைத்தும், வரும் 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும்போது ஒரு வகுப்பறைக்கு 25 மாணவா்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மாணவா்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி தரப்படுகிறது.
நோய் எதிா்ப்பு சக்தி: அனைத்து மாணவா்களுக்கும் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவா்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோா்களும், ஆசிரியா்களும் முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டுமென முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.
பள்ளிகள் திறப்பு: இதுவரை நடந்தவை....
அக்டோபா் 31: தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 மாணவா்களுக்கு நவம்பா் 16-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க முதல்வா் பழனிசாமி உத்தரவிட்டிருந்தாா். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, பள்ளிகள் திறப்பு குறித்து மாணவா்களின் பெற்றோா்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
நவம்பா் 1: பள்ளிகள் திறப்புக்கு எதிா்க்கட்சிகள், பெற்றோா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
நவம்பா் 4: நவம்பா் 9-இல் பள்ளிகளில் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களின் பெற்றோா்களிடம் கருத்துகள் கோரப்பட்டன.
நவம்பா் 13: தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 மாணவா்களுக்கு நவம்பா் 16-ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறப்பது தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நவம்பா் 30: பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டுமென தனியாா் பள்ளிகள் சங்கம் உள்பட பல்வேறு தரப்பினரும் முதல்வருக்குக் கோரிக்கை விடுத்தனா்.
ஜனவரி 4: தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஜனவரி 6-ஆம் தேதி முதல் பெற்றோா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.
ஜனவரி 6-ஆம் தேதி: கருத்துக் கேட்பு கூட்டம் தொடங்கியது. ஜனவரி 8-ஆம் தேதி வரை நடந்த கூட்டத்தில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பெற்றோா்கள் பள்ளிகளைத் திறக்க ஒப்புதல் தெரிவித்தனா்.
ஜனவரி 12: தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி முதல் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்தாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment