Title of the document

 தேசிய திறனாய்வுத் தேர்வு: CEO க்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுத்தல் ! 

மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு டிச.27ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குத் தேர்வுத் துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

பள்ளிகளில் 10-ம் வகுப்புப் படிக்கும் மாணவர்களில் சிறந்த மாணவர்களைத் தேர்வுசெய்து அவர்களின் மேற்படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நோக்கில் ஆண்டுதோறும் தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. என்சிஇஆர்டி நடத்தும் இந்தத் தேர்வானது 2 நிலைகளை உள்ளடக்கியது. முதல்கட்டத் தேர்வு மாநில அளவிலும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு 2-வது கட்டமாகத் தேசிய அளவிலும் தேர்வு நடைபெறும்.

அதன்படி 2020- 2021ஆம் கல்வியாண்டுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE) டிசம்பர் 27ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது.

இந்நிலையில் தேர்வை நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 10 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுத ஏற்பாடு செய்ய வேண்டும்.

* அனுமதிச் சீட்டு உள்ள தேர்வர்கள் மற்றும் பெயர்ப்பட்டியலில் உள்ள தேர்வர்களை மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்க வேண்டும்.

* நுழைவுச் சீட்டில் புகைப்படம் மாறியிருந்தாலோ அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ அதே நுழைவுச் சீட்டில் உரிய தேர்வரின் புகைப்படத்தை ஒட்டி அதில் பள்ளித் தலைமை ஆசிரியரின் சான்றொப்பம் பெற வேண்டும்.

* பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் இருப்பின், உரிய திருத்தம் செய்து சான்றொப்பம் இட்டு, முதன்மைக் கண்காணிப்பாளரின் கையொப்பத்தைப் பெறவேண்டும்.

* தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக 26-ம் தேதியன்று அனைத்துத் தேர்வு மையங்களிலும் கிருமிநாசினி தெளித்துச் சுத்தம் செய்ய மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சித் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

* தேர்வெழுதும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். இல்லாதவர்களுக்கு முகக்கவசம் வழங்க வேண்டும்.

* தேர்வெழுதும் மாணவர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

* தேர்வர்கள் தண்ணீர் பாட்டில்கள், சானிடைசர்களைத் தேர்வறைக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post