கல்வித்துறையின் ‘ஜீரோ’ - தினகரன் தலையங்கம் !
கொரோனா பாதிப்பினால் சமூகத்தின் அனைத்து தரப்பும் பாதிக்கப்பட்டு விட்டது. வருங்காலத்தை நிர்ணயிக்கும் மாணவர்கள் சமுதாயமும் இவ்வாண்டு தங்கள் கல்வியை இழந்து நிற்கிறது. வரும் புத்தாண்டிலும் பள்ளிகள் திறப்பு உறுதியில்லை. இந்நிலையில் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ‘ஜீரோ கல்வியாண்டு’ என்னும் புது அஸ்திரத்தை ஏவி விட்டுள்ளார். கல்வி தளத்தில் அமைச்சரின் அறிவிப்பு இப்போது பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. ‘ஜீரோ கல்வியாண்டு’ என்பது மாணவர்கள் அனைவரும் ஓராண்டை மொத்தமாக இழக்க வேண்டியது வரும். இவ்வாண்டு 9ம் வகுப்பு படிக்கும் மாணவர், ஜீரோ கல்வியாண்டு காரணமாக அடுத்தாண்டும் 9ம் வகுப்பை படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்.
இவ்வாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் பள்ளிகளில் நடக்கவில்லை. தனியார் பள்ளிகள் மட்டும் ஆன்லைனில் தேர்வுகளை நடத்தி தங்கள் ஆசையை தீர்த்துக் கொண்டன. பாடங்களை குறைத்து பள்ளி இறுதி தேர்வை அரசு நடத்தினால் பல்வேறு சிக்கல்கள் எழும். கொரோனா பற்றிய பயம் முழுமையாக நீங்கவில்லை. அதையும் தாண்டி பாடங்களை குறைத்து, பெயரளவுக்கு இறுதி தேர்வு நடத்தினால், மதிப்பீடு முறைகளில் மாற்றம் செய்ய வேண்டியதுவரும். தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களை பாஸ் என அறிவித்தால் கூட, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தேர்வு முறையிலும், மதிப்பீடு முறையிலும் பல சவால்களை எதிர்கொள்வர்.
சென்ற ஆண்டு எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடத்தாமலே காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டபோது, மாணவர் சமுதாயம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. பல பள்ளிகளில் மாணவர்கள் நன்கு படிக்க வேண்டும் என்பதற்காக காலாண்டு, அரையாண்டுகளில் தேர்வு மதிப்பெண்களை குறைத்ததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஜீரோ கல்வியாண்டு என்கிற அமைச்சரின் புது யோசனைக்கு கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பும் நிலவுகிறது. ஏனெனில் பள்ளிக்கல்வியில் வகுப்புகள் என்பதே ஒருவித தொடர்ச்சி முறையாகும்.
9ம் வகுப்பு கல்வியை கற்காமல், ஒரு மாணவர் எஸ்எஸ்எல்சி படிக்கும்போது அவருக்கு மனதளவில் பயம் இருக்கும். தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் ெபரும் தொகையை வாங்கிக் கொண்டு இவ்வாண்டு ஆன்லைன் கல்வியை போதித்தன.ஆனால், பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆன்லைன் கல்வி முழுமையாக நடக்கவில்லை. ஆன்லைன் கல்வியில் கற்றல், கற்பித்தல் முறை ஓரம் கட்டப்பட்டது. எனவே ஜீரோ கல்வியாண்டு சிறந்தது என கல்வியாளர்கள் மத்தியில் கருத்தும் நிலவுகிறது. ஆனால், ஜீரோ கல்வியாண்டு என அறிவிக்கும்போது தனியார், மெட்ரிக் பள்ளிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்.
ஏனெனில் அத்தகைய கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் கல்வியை காரணம் காட்டி மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து விட்டன. அத்தொகையை அடுத்தாண்டுக்கு பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் எழும். மாணவர்கள் தங்கள் இளம்பிராயத்தில் ஓராண்டை வீணாக்க வேண்டியது வரும். எனவே ஜீரோ கல்வியாண்டு விஷயத்தில் மாணவர்கள் நலன், ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும். அரசியல் லாபத்திற்காக முடிவுகளை மேற்கொள்ளக் கூடாது. பள்ளிகள் திறப்புக்கு பெற்றோர், கல்வியாளர்கள், மாணவர்கள் கருத்து கேட்டாற்போல், ஜீரோ கல்வியாண்டுக்கும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி முடிவெடுக்கலாம்..
நன்றி : தினகரன்
Post a Comment