Title of the document
பள்ளி, கல்லூரிகளைத் திறக்காவிட்டால் ஜனவரி முதல் போராட்டம் !




மாணவர்களின் துன்பத்தைப் போக்க உடனடியாகப் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வேண்டும் என்றும், இல்லையெனில் ஜனவரி மாதம் முதல் போராட்டம் நடத்தப்படும் என்றும் இந்திய மாணவர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் வி.பி.சானு, பொதுச் செயலாளர் மயூக் பிஸ்வாஸ் இன்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

’’பெருந்தொற்றுக் காலத்தில் இருந்து நாடு முழுவதும் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள் நடைபெற்றாலும் அரசிடம், கல்வி நிறுவனங்களை மீண்டும் முழுமையாகத் திறப்பது குறித்த விரிவான திட்டம் எதுவுமில்லை.

நேரடிக் கற்றல் தடைப்பட்ட சூழலில் ஆன்லைன் மூலம் இணையத்தில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிவேக இணையம், தனி அறை, மேசை உள்ளிட்டவை தேவைப்படக் கூடிய அக்கல்வி எல்லோருக்கும் சாத்தியம் ஆவதில்லை.

லேப்டாப், குறைந்தபட்சம் ஸ்மார்ட்போனைக்கூட வாங்க முடியாத சூழலில், விளிம்புநிலை மாணவர்கள் தங்களுக்கான கற்றல் வாய்ப்பை இழக்கின்றனர். ஸ்மார்ட்போன் வாங்க வழியில்லாமல் நிகழ்ந்த தற்கொலைகளை யாரும் மறக்க முடியாது. அதேபோல குழந்தைத் தொழிலாளர் பிரச்சினை, குழந்தைகள் மீதான குடும்ப வன்முறை இந்தக் காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.

இதற்கிடையே இத்தனை நாட்கள் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்க, ஆன்லைன் கற்பித்தல் செயலிகள் காரணமா என்று கேள்வி எழுகிறது. கல்லூரி மாணவர்களிடையே இறுதி ஆண்டுத் தேர்வுகள் கட்டாயப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டபோது கல்லூரிகளை இன்னும் திறக்காதது ஏன்? தொழிலதிபர்கள் அரசைக் கட்டாயப்படுத்தி மால்களையும், திரையரங்குகளையும் மதுக்கடைகளையும் திறக்க வைக்கும்போது வகுப்பறைகளை ஏன் திறக்கக்கூடாது?

கல்வி நிறுவனங்களை மூடி லட்சக்கணக்கான மாணவர்களின் கனவுகளை அழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பள்ளி, கல்லூரிகளை அரசு திறக்கவில்லை என்றால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேசிய அளவிலான போராட்டம் நடத்தப்படும்’’.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

3 Comments

Post a Comment

Previous Post Next Post