குரூப் 1 தேர்வுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? - ஐகோர்ட் நீதிபதிகள் அதிரடி
நமது வலைத்தளத்தில் கிடைத்த தகவலின்படி குரூப்-1 தேர்வுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என ஐகோர்ட் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்கள் இதில் பட்டப்படிப்பை மட்டும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு என்றால், தமிழ்நாட்டில் இருந்து தமிழ் மறைந்துவிடும். திருத்தம் செய்தே நியமனம் செய்ய வேண்டும். அதுவரை ஏன் குரூப் 1 தேர்வுக்கு தடை விதிக்கக்கூடாது என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: சட்டப்படிப்பை தமிழ் வழியில் முடித்துள்ளேன். டிஎன்பிஎஸ்சி கடந்தாண்டு நடத்திய துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி அலுவலர் உள்ளிட்ட 181 குரூப் 1 பணியிடங்களுக்கு விண்ணப்பித்தேன். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றேன். பிரதான எழுத்துத்தேர்வை முடித்து, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டேன். கடந்த டிச. 9ல் தேர்வானோர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் எனது பெயர் இடம் பெறவில்லை.
தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான ஒதுக்கீட்டிலும் எனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஆனால், தமிழ்வழியில் கல்வி பயின்றோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் முறை பின்பற்றப்பட்டுள்ளது. இந்த சலுகையைப் பெற எனக்கு தகுதி இருந்தும், எனக்கு அந்த சலுகை வழங்கப்படவில்லை. தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான இடஒதுக்கீட்டை, தொலைநிலைக்கல்வியில் பயின்றவருக்கும் வழங்கியுள்ளனர். இதனால் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொலைநிலைக்கல்வியில் சில பாடங்கள் ஆங்கிலத்திலும், சில பாடங்கள் தமிழிலும் நடத்தப்படுகிறது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் இந்த ஒதுக்கீட்டை தொலைநிலைக்கல்வியில் பயின்றவர்கள் பெற்றுள்ளனர்.
எனவே, தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சலுகைப்படி, தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்க தடை விதிக்க வேண்டும். குரூப் 1 தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்கவேண்டும். கல்லூரிக்கு சென்று முழு நேரமாக தமிழ்வழியில் பயின்றவர்களை, தேர்வு செய்து புதிய பட்டியல் வெளியிட்டு, அதன்பிறகே குரூப் 1 பணி நியமனங்களை மேற்கொள்ளுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், ‘‘தமிழ் வழியில் படித்தவர்கள் என்றால், பள்ளிப்பாடம் முதல் அனைத்துப்படிப்புகளையும் தமிழ் வழியில் பயின்றவர்களா அல்லது பட்டப்படிப்பை மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா?’’ என கேள்வி எழுப்பினர்.
பின்னர் நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் தமிழ் வழியில் படிப்பவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். இதை தவிர்ப்பதற்காகத்தான், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதும் என்றால், அதன் நோக்கமே சிதைந்து விடும். இந்த நிலை நீடித்தால், தமிழ்நாட்டில் இருந்து தமிழ் மறைந்து விடும். இங்கு தமிழ் வாழவில்லை என்றால் வேறெங்கும் வாழாது. எனவே, தொலைநிலைக்கல்வியில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கிடையாது என திருத்தம் கொண்டு வர வேண்டியது அவசியம். அதன்பிறகே குரூப் 1 நியமனங்கள் இருக்க வேண்டும். அதுவரை ஏன் குரூப் 1 தேர்வுக்கு தடை விதிக்கக் கூடாது?’’ என கேள்வி எழுப்பினர். பின்னர், இதுதொடர்பாக விரிவாக உத்தரவிடுவதாகக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment