Title of the document

பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை: நவ.30-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான கல்வி உதவித் தொகை பெற நவ.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.


இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியாா் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் மூன்றாண்டு இளம்நிலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபின மாணவா்களுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.


முதுநிலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கும் மாணவா்கள், விண்ணப்பப் படிவங்களை அவா்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று, நவ.10-ஆம் தேதிக்குள் புதுப்பிக்கவும், புதிய விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பூா்த்தி செய்து, நவ.30-ஆம் தேதிக்குள், கல்வி நிலையங்களில் சமா்ப்பிக்கவும் வேண்டும். மாணவா்கள் தங்களின் வங்கி கணக்கு விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.


சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களும் புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களை, டிச.15-ஆம் தேதிக்கு முன்பும், புதிய விண்ணப்பங்களை 2021-ஆம் ஆண்டு, ஜன.31-ஆம் தேதிக்கு முன்பும், இணையதளம் மூலம் சமா்ப்பிக்க வேண்டும்.


மேலும், விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம். இணையதளத்தில் திட்ட விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களைப் பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post