10, 12-ம் வகுப்பில் முதலிடம் பெற்றோருக்கு கார் பரிசு: எந்த மாநில அரசு தெரியுமா?

10, 12-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ஜார்க்கண்ட் கல்வித்துறை அமைச்சர் ஜெகர்நாத் மேத்தோ காரைப் பரிசாக வழங்கினார்.
ஜார்க்கண்ட் கல்வி கவுன்சில் சார்பில் அம்மாநிலத்தில் 10, 12-ம் வகுப்புத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகின. அப்போது மாநிலக் கல்வித்துறை அமைச்சர் ஜெகர்நாத் மேத்தோ, பொதுத் தேர்வில் முதலிடம் பிடிப்போருக்குக் காரைப் பரிசாக வழங்குவதாக உறுதியளித்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், தற்போது அமைச்சர் ஜெகர்நாத் மேத்தோ 10, 12-ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குக் காரைப் பரிசாக வழங்கியுள்ளார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவனரான வினோத் பிஹாரி மேத்தோ பிறந்த நாளில் கார் சாவிகள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெகர்நாத் மேத்தோ, ''தேர்வில் முதலிடம் பெற்ற மனிஷ் குமார் மற்றும் அமித் குமாருக்கு மாருதி ஆல்ட்டோ கார்களைப் பரிசாக வழங்கினேன்'' என்று தெரிவித்துள்ளார்.
10-ம் வகுப்பு மட்டுமே முடித்த அமைச்சர் ஜெகர்நாத் மேத்தோ, அண்மையில் 11-ம் வகுப்பில் சேர்ந்ததும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று அவர் கூறி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment