Title of the document
New Education Policy 2020 - தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர்  இன்று ஆலோசனை

புதிய கல்விக்கொள்கை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்த இருக்கிறார்.

புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையை கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு மத்திய அரசிடம் மே மாதம் சமர்ப்பித்தது. அதன்பின்னர், பொதுமக்களின் கருத்துகள் கேட்பதற்காக வெளியிடப்பட்டது. அதுகுறித்து கல்வியாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கருத்துகளை மத்திய அரசுக்கு தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக மத்திய மந்திரிசபை இந்த புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த கல்விக்கொள்கை குறித்து நேற்றுமுன்தினம் பிரதமர் நரேந்திரமோடி பேசுகையில், ‘கல்விக்கொள்கை மூலம் இந்தியாவில் கற்பித்தலில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் ஒரேமாதிரியான கல்வி கிடைக்க செய்கிறது. புதிய கல்விக்கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது’ என்பது உள்பட பல்வேறு விஷயங்களை கூறினார். தமிழகத்தில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்கட்சிகள் உள்பட பல அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால் இதில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் இதுதொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பும்போது, அதுகுறித்து முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் புதிய கல்விக்கொள்கையில் அரசின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுப்பதற்கு ஏதுவாக இன்று (திங்கட்கிழமை) சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இதில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், கே.பி.அன்பழகன், தலைமை செயலாளர் க.சண்முகம், முதல்-அமைச்சரின் செயலாளர்களில் கல்வித்துறையை கவனித்துக்கொண்டு இருக்கும் எஸ்.விஜயகுமார், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, பள்ளிக்கல்வி துறை செயலாளர் தீரஜ்குமார் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இன்று காலை 10 மணிக்கு நடக்கும் இந்த உயர்மட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் புதிய கல்விக்கொள்கை குறித்து அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கலாம் என்பது குறித்து ஆராயப்பட உள்ளது. அதன்பின்னர், எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கல்விக்கொள்கையில் அரசின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post