தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 5.50 லட்சம் மாணவர்கள் சேர்க்கை - பள்ளிக்கல்வித்துறை
1 முதல் 11ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 5 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சேர்க்கையானது கடந்த 17ம் தேதியன்று தொடங்கியது. பெற்றோர்கள் பலர் தங்களது குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் 1 முதல் 10ம் வகுப்பு வரை இதுவரையில் 5 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையானது நேற்று முதல் தொடங்கியிருக்கிறது.
தொடர்ந்து, 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் தற்போது வரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிய சேர்க்கையை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 1 முதல் 11ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையானது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், ஒரு பள்ளியில் ஏற்கனவே படித்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும், அதன் பிறகே வேறு பள்ளியில் இருந்து வரும் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்படுவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்திருக்கிறது.
அதுமட்டுமின்றி இந்த ஆண்டு ஏராளமான மாணவர்கள் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.பி. பள்ளிகளில் இருந்து மாற்று சான்றிதழ் பெற்று கொண்டு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளை நாடி வருவதாகவும் பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
Post a Comment