10th Std Private Cnadidates - தனித் தேர்வர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய மனு நிராகரிப்பு
பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களை, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.
கோவையை சேர்ந்த, பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனு:என் மகன், 10ம் வகுப்பு தனித் தேர்வு எழுத, ஹால் டிக்கெட் பெற்றார். செய்முறை தேர்வில் கலந்து கொண்டார்.இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும், 'பாஸ்' என, அறிவிக்கப்பட்டது.
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத, ஹால் டிக்கெட் பெற்ற தனித் தேர்வர்களுக்கு, தேர்ச்சி பற்றி அறிவிக்கவில்லை. இதற்கிடையில், வரும், 24ம் தேதி முதல் மேல்நிலைப் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என, அரசு அறிவித்துள்ளது.தனித் தேர்வர்களுக்கு முடிவு அறிவிக்கும் வரை, மேல்நிலைப் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரி களில், மாணவர்கள் சேர்க்கையை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும்.தனித் தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, மதிப்பெண் பட்டியல் வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.கல்வித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தனித் தேர்வர்களுக்கு, காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் கிடையாது. செப்., 22ல் இவர்களுக்கு தேர்வு துவங்க உள்ளது.அக்., இரண்டாவது வாரத்தில் முடிவு வெளியாகும்.'தற்போதைய சூழ்நிலையில், பள்ளி, கல்லுாரிகள் எப்போது திறக்கும் என, தெரியவில்லை.
அரசு தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை' என்றார்.இதையடுத்து, பள்ளிகளில் படித்த 10ம் வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வில் வெற்றி பெற்றதாக அறிவித்தது போல், தனித் தேர்வர்களை அறிவிக்க இயலாது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Post a Comment