Title of the document


10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த அனுமதி அளித்துள்ள தமிழக அரசு, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

கரோனா காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏராளமான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே 10, 11,12-ம் வகுப்புத் தனித்தேர்வர்கள், தோல்வியடைந்த மாணவர்களுக்கு மீண்டும் துணைத் தேர்வுகள் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்தது.

10-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி, தொடர்ச்சியாக 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 11-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 29-ம் தேதி தொடங்கி, அக்டோபர் 7-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 12-ம் வகுப்புத் தேர்வு செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி, 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதற்கிடையே 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித் தேர்வு நடத்த அனுமதி வழங்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம், தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தது. இந்நிலையில் அரசு, தேர்வை நடத்த அனுமதி அளித்து, தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த அரசாணையைத் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ளார். அதில், ''மாணவர்கள் உரிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். சிறிய அறையாக இருந்தால் 10 மாணவர்கள் வீதம் அமர வைக்கப்பட வேண்டும்.

400 சதுர அடி உள்ள அறையாக இருந்தால் 20 மாணவர்கள் வீதம் அமர வைக்கலாம். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தேர்வெழுத வரும் மாணவர்களுக்குத் தனி அறைகள் கொடுக்கப்பட வேண்டும்.

ஹால் டிக்கெட்டுகள் அனைத்தையும் இணைய வழியில் பதிவிறக்கம் செய்ய மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்'' உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post