Title of the document
தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடங்களில் சேர்க்கப்பட்ட ஏழை, எளிய மாணவர்களுக்கான, கல்வி செலவு நிலுவை தொகையை, ஆறு வாரங்களில் வழங்கும்படி, அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக், மேல்நிலைபள்ளிகள் சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு:கல்வி பெறும் உரிமை சட்டத்தின்படி, ஒவ்வொரு தனியார் பள்ளியிலும், 25 சதவீத இடங்கள், ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை, அரசு ஏற்க வேண்டும்.கடந்த, 2016 - 17ல், ஒரு மாணவருக்கான கல்வி செலவு தொகை, 25 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. அதுவே, அடுத்த கல்வியாண்டில், 11 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டது. பள்ளி கல்விக்கான பட்ஜெட்டாக, தமிழக அரசு, 28 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குகிறது.

அதன்படி, ஒரு மாணவனுக்கு 32 ஆயிரம் ரூபாய், அரசு செலவு செய்கிறது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவனுக்கான செலவு தொகையை அரசு குறைத்துள்ளதால், எங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது; 25 சதவீத இடங்களில் சேரும் மாணவர்களுக்கான கல்விச் செலவை, சரியாக கணக்கிட வேண்டும்.மேலும், 2017 முதல், 2019 வரையிலான, மாணவர்களுக்கான கல்வி செலவு தொகையை, மறு நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும். மாணவர்கள் சேர்ந்த பின், ஜூனில், 50 சதவீதம்; டிசம்பரில், 25 சதவீதம்; மீதி தொகையை ஏப்ரலில், தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் சிலம்பண்ணன், அரசு சார்பில், சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து, '2017 முதல், 2020 வரையான கல்வியாண்டில் வழங்க வேண்டிய கல்வி செலவு நிலுவை தொகையை, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, ஆறு வாரங்களில், அரசு வழங்க வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.மறு நிர்ணயம் கோரிக்கை குறித்து, அரசு பதில் அளிக்கும்படி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். விசாரணையை, ஆக., 25க்கு தள்ளி வைத்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post